தமிழகம்

தேர்தல் மன்னன் பத்மராஜன் திருப்பரங்குன்றத்தில் வேட்புமனு தாக்கல்: 202-வது முறையாக போட்டி

செய்திப்பிரிவு

தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் என்பவர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 

தேர்தலில் போட்டியிட இவர் மனு தாக்கல் செய்வது இது 202-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர் 1988-ம் ஆண்டு தொடங்கி உள்ளாட்சி, எம்.எல்.ஏ., எம்.பி., குடியரசுத் தலைவர் தேர்தல் வரை போட்டியிட்டுவிட்டார். இதுவரை 201 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். ஆனால், இதுவரை எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை.

கடந்த முறை நடைபெற்ற குடியரசுத் தேர்தலிலும் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை மற்றும் தேர்தல் செலவினங்கள் ரீதியாக மட்டும் ௹பாய் 30 லட்சம் செலவு செய்துள்ளார்.

ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர்..

தேர்தல் வெற்றி தனது நோக்கமல்ல என்று பலமுறை கூறியிருக்கும் பத்மராஜன் அதிக அளவில் தோல்விகளை சந்தித்த வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.  பிரதமர்  மோடி, குஜ்ரால், தேவகவுடா மற்றும் முதல்வர்கள் ஜெயலலிதா  கருணாநிதி , எடியூப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை மக்களவைக்கு 31 தடவை, மாநிலங்களவைக்கு 40 முறையும் போட்டியிட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் 64 தடவையும். சட்டமேலவை பதவிக்கு 2 முறையும் போட்டியிர்ட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலையும் பத்மராஜன் விட்டுவைக்கவில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த், பிரதீபா பாட்டீல், கே.ஆர்.நாராயணன் உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளார்.

பல்வேறு தேர்தல்களிலும் வேட்பாளராக  போட்டியிட்டு வரும்நிலையில் இவரின் செயல்பாடுகள் குறித்து கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், "இதுவரை நான் 202 முறை பல்வேறு தேர்தல்களில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய். மன்மோகன் சிங்,  குஜ்ரால், மோடி ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டேன். முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளேன்.

தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே  நோக்கம். வெற்றி பெறுவதல்ல. அது எனக்கு தாங்காது. இதுவரை தேர்தலுக்காக சொந்தப் பணத்தில் ரூ30 லட்சம் செலவு செய்துள்ளேன்" என கூறினார்.

SCROLL FOR NEXT