தமிழகம்

செங்கல்பட்டு அருகே துணிகரம்; ரூ. 11 கோடி மற்றும் 130 சவரன் நகை கொள்ளை: காரை மடக்கி அதிகாரிகள்போல் நடித்த நபர்கள் கைவரிசை

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தொழிலதிபர் காரை மடக்கி சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸார் எனக்கூறி ரூ.11 கோடி ரொக்கப்பணம் மற்றும் 130 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் மதுரையில் நடைபெற்ற நகை கண்காட்சியில் நகைகளை காட்சிக்கு வைத்துவிட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் ரூ.11 கோடி ரொக்கப்பணம் மற்றும் 130 சவரன் தங்கநகைகளை தனது காரில் எடுத்துக்கொண்டு இன்று சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்.

அவரது காரை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்மக் கும்பல் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சோதனைச்சாவடி அருகே அவரது காரை வழிமறித்துள்ளது. என்ன என விபரம் கேட்ட தயாநிதியிடம் தாங்கள் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் எனக்கூறி பழங்கால நகைகள் கடத்தி வருவதாக தகவல் காரை சோதனையிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தயாநிதியை காரை விட்டு இறக்கி தனியாக ஒரு ஆட்டோவில் ஏற்றி அமரவைத்துள்ளனர். பின்னர் காரை சோதனையிட்ட கும்பல் காரிலிருந்த ரூ.11 கோடி பணம் மற்றும் நகைகளை எடுத்து இவைகள் என்ன என்று கேட்டுள்ளது. அதற்கு நாங்கள் கண்காட்சி முடித்து வருகிறோம் என தயாநிதிகூற இதற்கான ஆவணங்கள் எங்கே எனக்கேட்டபோது அது வீட்டில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் இவைகளை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துவிடுகிறோம் என அக்கும்பல் கூற வேண்டாம் நான் ஆவணத்தைக்கொண்டு வந்து காட்டுகிறேன் என அவர் கூற அப்படியானால் காலையில் கிண்டி சிலைகடத்தல் தடுப்பு அலுவலகத்துக்கு வந்து ஆவணத்தை காட்டிவிட்டு நகை, பணத்தை  பெற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துவிடுவோம், பிறகு நீங்கள் வழக்குகளை சந்திக வேண்டி இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் வந்தக்காரில் சிலரும், தயாநிதியின் காரை சிலரும், ஆட்டோவில் தயாநிதியுடன் சிலரும் ஏறிக்கொண்டு வாகனம் சென்னை நோக்கி வந்துள்ளது. இடையில் தயாநிதியின் கவனத்தைதிசைத்திருப்பி அனைவரும் அவர்களது காரில் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் அளித்த முகவரியில் சென்று பார்த்தபோது யாரும் அவ்வாறு வரவில்லை என தெரிவித்ததால் உடனடியாக செங்கல்ப்பட்டு போலீஸில் தயாநிதி புகார் அளித்துள்ளார்.

பணம் மற்றும் நகையை காரில் கொண்டு வந்தது பறி கொடுத்த தயாநிதிமீது ஏற்கெனவே சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் வழக்கு உள்ளது. இதனால் அவரைப்பற்றி நன்கு அறிந்த யாராவது அவரைப்பற்றி தகவல் கொடுத்து பணத்தைப் பறித்துச் சென்றார்களா? அல்லது தயாநிதியே நாடகமாடுகிறாரா? என போலீஸார் சந்தேகத்துடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்களுக்கு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு குறித்து எப்படி தெரியும், கிண்டி அலுவலகம் குறித்து எப்படி சரியாக சொன்னார்கள், தயாநிதிமேல் ஏற்கெனவே வழக்கு உள்ள நிலையில் அவரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் என்றுச் சொன்னால் அவர் நம்பக்கூடும் என திட்டம் போட்டு செயல்பட்டது எப்படி என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னைக்கு அருகே மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கில் பணம், நகை வழிப்பறியில் பறிபோனது போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT