சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தகுதி நீக்கம், உறுப்பினர்கள் மறைவு உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துவிட்டது.
இதற்கிடையே 4 சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். அவர்களிடம் முதல்வர், துணை முதல்வர் நேர்காணல் நடத்தினர்.
இந்நிலையில் 4 சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி - சாகுல் ஹமீது
சூலூர் - சுகுமார்
ஒட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன்
திருப்பரங்குன்றம் - மகேந்திரன்
அரவக்குறிச்சியில் களம் காணும் சாகுல் ஹமீது அம்மா பேரவை தலைவராக உள்ளார். சூலூரில் போட்டியிடும் சுகுமார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் தற்போது கோவை புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார்,
முன்னாள் எம்எல்ஏவான சுந்தர்ராஜன் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளராக உள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மகேந்திரனும் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர். இவர் தற்போது மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக அமமுகவில் பொறுப்பு வகிக்கிறார்.