பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனக்கோரி பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்றத்தில் 10 பெண் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது.
10 பெண் வழக்கறிஞர்கள் சார்பில், மனுவில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும்.
* சம்பவத்தின்போது எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜன், எஸ்.ஐ.யாக இருந்த ராஜேந்திர பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
* பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும்.
* பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபி, கோவை எஸ்.பி., பொள்ளாச்சி நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஜூன்-7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.