தமிழகம்

மாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தேர்தல்: புதுச்சேரியில் பிரச்சினை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி வெங்கடா நகர் வாக்குச்சாவடி மையத்தில் மாதிரி வாக்குப்பதிவை நீக்காமல் தொடர்ந்து இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடத்தியதால் பிரச்சினை ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டதுடன், மேலும் ஒரு மணி நேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காமராஜர் தொகுதிக்குட்பட்ட வெங்கடா நகர் பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலையில் தொடங்கிய போது வேட்பாளர்களின் முகவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் சரியாக இயங்குகிறதா என சோதனை செய்து 56 பேர் பரிசோதனை செய்ய மாதிரி வாக்குகளை பதிவிட்டனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை நீக்கி, உண்மையான வாக்குப்பதிவை தொடக்குவது வழக்கம். ஆனால், மாதிரி வாக்குப்பதிவு வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில், பிற்பகலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திறக்கவும்,  விவிபாட் இயந்திரத்தில் இருந்து எடுக்காமல் இருந்த ஒப்புகை சீட்டை அதிகாரிகள் எடுக்க முயன்றனர். இதைபார்த்த தேர்தல் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு அரை மணி நேரத்துக்கு மேலாக நிறுத்தப்பட்டது.

மேலும் வாக்களிக்க வந்தவர்கள் பிரச்சினையின் காரணமாக வாக்களிக்காமல் திரும்ப சென்றனர். இதனையடுத்து வேட்பாளர்களின் ஏஜெண்ட்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் எடுத்து சீல் வைக்கப்ட்டது. புதிய இயந்திரம், விவிபாட் பொருத்தப்பட்டது. இதற்கு முகவர்களும் ஒப்புதல் தந்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு நேரமும் இங்கு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT