தமிழகம்

பாஜக பிரமுகர் கொலையில் 5 பேர் கைது: கார் திருடுவதற்காக கொன்றது அம்பலம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வேலூர் அடுத்த சேண்பாக் கத்தைச் சேர்ந்தவர் பலராமன் (50). டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு மாற்று ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பாஜக மாவட்ட பயிற்சி முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி காஞ்சிபுரம் அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பலராமன் செல்போனில் கடைசியாக தொடர்புகொண்டது, வேலூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவரும் முகமது கௌஸிடம் (30). அவரிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். காட்பாடியைச் சேர்ந்த கௌஸ், காரைத் திருடி விற்கும் முயற்சியில் பலராமனை கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் விசாரணையின்போது ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு குறித்து போலீஸார் கூறியதாவது:

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கார்களை திருடிவந்து கொடுத்தால் பணம் கொடுப்பதாக கௌஸிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கௌஸ் காட்பாடியைச் சேர்ந்த அவரின் நண்பர் வருணிடம் தெரிவித்துள்ளார். இருவரும் பலராமன் எடுத்துச் செல்லும் காரை திருட திட்டமிட்டனர்.

இந்நிலையில் வடமாநில நோயாளி ஒருவரை சென்னை விமான நிலையத்துக்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பலராமனை அழைத்துப் போகச் சொல்லியிருக்கிறார் கௌஸ்.

பின்னர் மற்றொரு காரில் கௌஸ், அவரின் நண்பர் வருண் மற்றும் அவரின் உறவினர்களான போளூர் அடுத்த சந்தவாசலைச் சேர்ந்த நடராஜ், தஞ்சப்பன், வருணின் தோழி டெய்சி விக்டோரியா ராணி ஆகியோர் பலராமனை பின் தொடர்ந்தனர்.

விமான நிலையத்தில் நோயா ளியை இறக்கிவிட்ட பலராமன் அது குறித்து கௌஸிடம் தெரிவித்துள் ளார். இதையடுத்து, விக்டோரியா, தஞ்சப்பன், நடராஜ் ஆகியோர் வேலூர் செல்ல வேண்டும் என்று பலராமனிடம் கேட்டுள்ளனர். பலராமனும் அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். கௌஸும், வருணும் காரில் பலராமனை பின்தொடர்ந்தனர்.

மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பலராமனின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி, கை மற்றும் வாயை துணியால் கட்டி காரின் பின் பகுதியில் தூக்கி போட்டுக்கொண்டு வந்துள்ளனர். அவரின் வாய் மற்றும் மூக்கை காரில் வந்தவர்கள் மூடியதில் பலராமன் உயிரிழந்துள்ளார்.காரை ஆந்திர மாநிலம் புத்தூருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு காரின் எண் பலகையை மாற்றினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கௌஸ் அளித்த தகவலின் பேரில் வருண், வருணின் தோழி விக்டோரியா, நடராஜ், தஞ்சப்பன் ஆகியோரை கைது செய்தோம். அவர்கள் திருடிச் சென்ற ரூ.16 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் கார் திருட்டுக்கு பயன்படுத்திய மற்றொரு காரையும் பறிமுதல் செய்துள்ளோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸாருக்கு எஸ்பி பாராட்டு

கைது செய்யப்பட்ட 5 பேரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்களை கைது செய்த காஞ்சிபுரம் தாலுக்கா ஆய்வாளர் மாதவன் தலைமையிலான போலீஸாரை பாராட்டினார்.

SCROLL FOR NEXT