சொந்த ஊருக்குப் போன இடத்தில் இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சென்னை ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை ஆயுதப்படையில் காவலராக இருப்பவர் வினித் (27). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வெங்கத்தூர் ஆகும். இவர் 2013-ம் ஆண்டு பேட்ச் காவலர் ஆவார். ஆயுதப்படை காவலராக வேலூர் 15-வது பட்டாலியனில் பணியிலிருந்த இவர் கடந்த மார்ச் மாதம் சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
பணியில் மேலதிகாரிகளை மதிக்காத அலட்சியப் போக்கு, செல்வாக்கு காரணமாக வினித் பிரச்சினைக்குரிய நபராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இவர் உயர் அதிகாரிகள் அனுமதியின்றி சொந்த ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்துக் கேட்டபோது 15 நாள் மெடிக்கல் லீவு போட்டுள்ளார். கடந்த 7-ம் தேதி மீண்டும் பணியில் இணைய வேண்டிய நிலையில் கடந்த 6-ம் தேதி இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு சிக்கினார்.
இதையடுத்து மயிலம் காவல் நிலைய போலீஸார் வினித்தை கைது செய்து அவர் மீது ஐபிசி 354(A) (பாலியல் தொந்தரவு) , 506 (2) (ஆயுதத்தை வைத்து கொலை மிரட்டல்) , 419 (மோசடி செய்தல்) மற்றும் 4 (H) பெண் வன்கொடுமைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மறுநாள் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டிவனம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் காவலராக இருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டியவரே பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதால் சென்னை ஆயுதப்படை காவலர் ஆர்.வினித்தை காவல் ஆணையர் உத்தரவுப்படி ஆயுதப்படை துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பணியிடை நீக்க உத்தரவு நகல் சிறையிலிருக்கும் வினித்திடம் வழங்கப்பட்டது.