தமிழகம்

கமலுடனான நட்பைக் கெடுத்து விடாதீர்கள்: ரஜினி

ஸ்கிரீனன்

கமலுடனான நட்பைக் கெடுத்து விடாதீர்கள் என்று தன் வீட்டில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது ரஜினி தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் இன்று (ஏப்ரல் 9) காலை வெளியிடப்பட்டது. இதற்கு திரையுலகினர் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'தர்பார்' படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது. இதற்காக மும்பை கிளம்பவுள்ளார் ரஜினி. இதனை முன்னிட்டு தன் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது "'தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் தொடர்பாக பலரும் பாராட்டினார்கள்" என்று தொடங்கினார்.

இடையே “மக்களவைத் தேர்தலில் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கமல் கேட்டுள்ளாரே” என்ற கேள்விக்கு, "என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பற்றி ஏற்கனவே சொல்லிட்டேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேலே இதைப் பற்றி நான் பேசவிரும்பவில்லை. இதைப் பெரிதாக்கி எங்களுக்கும் கமலுக்கும்  இடையேயான நட்பை கெடுத்து விடாதீர்கள்" என்று கூறினார்.

முன்னதாக, ரஜினி தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பல பேட்டிகளில் கமல் தெரிவித்திருந்தார். 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூட "ரஜினி கட்சி அலுவலகத்துக்கு வந்தவரிடம் கேட்க வேண்டியதை நேரில் கேட்டுவிட்டேன். கண்டிப்பாகச் செய்கிறேன் என்று கூறியுள்ளார். ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கமல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பை வைத்துப் பார்த்தால், கமலுக்கு ரஜினி ஆதரவு இல்லை என்று தெளிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT