தமிழகம்

தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம்: பேச முடியாமல் சிரமப்பட்ட முதல்வர் பழனிசாமி

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் முதல்வர் பழனிசாமி, மதுரை பொதுக்கூட்டத்தில் பேச முடியாமல் சிரமப்பட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் அமைச்சர்கள் சிலர், வாரிசுகளுக்காகப் பிரச்சாரம் செய்ய, அந்தந்தத் தொகுதிகளிலெயே முடங்கிவிட்டனர். இந்நிலையில் ஈபிஎஸ் தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரை கே.புதூரில் மாநகர அதிமுக சார்பில் வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவரால் சரியாகப் பேசமுடியவில்லை.

ஒரு கட்டத்தில் அவரே, தொண்டை கட்டிக் கொண்டது என்னால் சத்தமாகப் பேச முடியவில்லை என்று வாய்விட்டுச் சொன்னார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ''15 நாட்களாக பிரச்சாரத்தில் பேசி வருவதால் தொண்டை கட்டிக் கொண்டது. பேச முடியாத சூழ்நிலையிலும் கூட கட்சியின் வெற்றி முக்கியம் என்பதால், மதுரையில் பேச வந்துள்ளேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை தொடருவேன்'' என்றார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரின் பிரச்சாரத்துக்கான வேலைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்த்துக்கொள்வதால் கவலை இல்லாமல்,  ஓபிஎஸ்ஸும் தமிழகம் முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT