தமிழகம்

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை  முடக்கியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டவிரோதமாக கிரானைட் குவாரி நடத்தியதற்காக மதுரை மற்றும் சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையானது தற்காலிகமாக முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பஸ் கிரானைட்ஸ் பிரைவேட் லிமிடட் மீது தமிழக காவல்துறை பதிவு செய்த வழக்கின் படி அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் குற்றப்பத்திரிகையானது மேற்கூறிய நிறுவனம் பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பங்குதாரர்கள், இயக்குநர்கள் எஸ்.நாகராஜன், தயாநிதி அழகிரி ஆகியோர் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து தமிழக அரசின் டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோத சுரங்கப் பணிகள் மேற்கொண்டதோடு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அமலாக்கத்துறை தற்காலிகமாக சொத்துகளை முடக்குகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT