தமிழகம்

டெல்லியில் பிடிபட்ட உதயகுமார் நேபாளம் செல்வதற்கு தடை: குடியுரிமை அதிகாரிகள் விசாரணை

செய்திப்பிரிவு

டெல்லி விமான நிலையத்தில், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் பிடிபட்டார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தாரா என்ற கோணத்தில் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நேபாளம் செல்ல உதயகுமார் வந்ததாகவும், அவர் அங்கிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல இருப்பதாகவும் கூறி டெல்லி விமான நிலையத்தில் உதயகுமாரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை நேபாளம் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உதயகுமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை வரை அவர் குடியுரிமை அதிகாரிகளின் பிடியில்தான் இருந்தார். இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டு பதிலுக்காக காத்திருக்கின்றனர். அநேகமாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நாகர்கோவிலில் உதயகுமாரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, `நேபாளம் நமது அண்டை நாடு. அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை. நேபாளம் செல்பவர் அங்கிருந்து வேறு நாட்டுக்கு தப்பி சென்று விடுவார் என சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? வாக்கு அரசியலை எப்போதும் போராளிகள் நம்புவதில்லை. அணு உலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் சித்தரிக்கின்றனர்’ என்றனர்.

அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு நிர்வாகி முகிலன் கூறும்போது, `நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் மனித உரிமை மீறல் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில், அரசு நடத்திய மனித உரிமை மீறல்களை பற்றி அக்கூட்டத்தில் உதயகுமார் பேச இருந்தார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றார். அங்கிருந்து காத்மாண்டு செல்ல பிற்பகல் 3 மணிக்கு விமான பயணச்சீட்டு எடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் உதயகுமாரிடம் விமான நிலைய, காவல்துறை அதிகாரிகள், ‘உங்கள் மீது நிறைய வழக்குகள் உள்ளன. நீங்கள் காத்மாண்டு செல்ல திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் அனுமதி தர வேண்டும்’எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், திருநெல்வேலி எஸ்.பி. நரேந்திரன் நாயர் ‘இதுபற்றி எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளார். இதனால் உதயகுமார் விமானம் ஏற அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்தில் குடியுரிமை துறை அலுவலகத்தில் உதயகுமார் வைக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT