தமிழகம்

வரப்பிரசாதமான அமிர்த கரைசல்!-கழிவுகளை உரமாக்கி, விளைச்சலை ஊக்குவிக்கும்

எஸ்.விஜயகுமார்

விவசாயத்தில் எப்போதும் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். பருவமழை தவறுவது, பயிர்களில் நோய் தாக்குதல், விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காதது என ஒவ்வொரு விவசாயியும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம். இவையெல்லாம் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சினைகள். ஆனால், விவசாயத்தில் வேலைப்பளுவை அதிகரிக்கச் செய்யும் சில பிரச்சினைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதில் ஒன்று வேளாண் விளை பொருட்களில் பயன்படுத்தப்பட்டவைபோக, மீதமாகும் கழிவுப் பொருட்கள்.

விளைந்த பயிரில் தேவையானவற்றைப் பயன்படுத்திக் கொள்வோம்.  அதேசமயம், நேரடியாகப் பயன் தராதவையும் உண்டு. வைக்கோல், மக்காச்சோளத் தட்டை, பருத்தி மிளார், தென்னை மட்டை போன்றவற்றை, வயலில் ஆங்காங்கே குப்பைபோல கொட்டி வைத்திருக்க வேண்டியிருக்கும்அல்லது அவற்றைத் தீயிட்டு எரித்து, அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்.

வயலில் தீயிட்டுக் கொளுத்தும் போது, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் அழிந்து, அந்த மண்ணின் வளம் குறைந்துவிடும். மேலும், இதில் எழும் அனல் காற்று,  அருகில் உள்ள வயலில் உள்ள பயிர்களையும் பாதித்துவிடும். சுற்றுச்சூழல் மாசும் அதிகரிக்கும்.

இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பயிர் நன்றாக விளைச்சல் தரவேண்டுமே என்பதும் விவசாயிகளின் முக்கியக் கவலை. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வாக, மத்திய அரசின் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில்  அமிர்த கரைசல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மத்திய அரசு சார்பில், கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு அமிர்த கரைசல் வழங்கப்பட்டு வந்தது.  கழிவு சிதைப்பான் 200 கிராம் கொண்ட பாட்டிலின் விலை அதிகபட்சம் ரூ.40 மட்டுமே. பாரம்பரிய வேளாண்மைத் திட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, இந்த அமிர்த கரைசல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அமிர்த கரைசல் அல்லது கழிவு சிதைப்பான் அல்லது வேஸ்ட் டிகம்போசர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது, கழிவுகளை சிதைத்து உரமாக்குவது, மண் வளத்தைப் பெருக்குவது, பயிர் விளைச்சலை அதிகரிப்பது, விளைபொருட்களின் தரத்தை உயர்த்துவது என பல தரப்பட்ட பயன்களை தருகிறது. நடப்பாண்டு முதல் தமிழக அரசே, ஓர் ஏஜென்சி மூலம் அமிர்தக் கரைசலை வாங்கி, விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட தமிழ்நாடு தொடர்பு அலுவலர் பொ.வேல்முருகன் கூறும்போது, “மத்திய அரசின் தேசிய அங்கக விவசாய  மையம் உருவாக்கிய பயனுள்ள படைப்புதான் கழிவு சிதைப்பான் எனப்படும் வேஸ்ட் டிகம்போசர். இந்தக் கரைசலைப் பயன்படுத்தும்போது, பண்ணைக் கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டிய தேவை இருக்காது.

கழிவு சிதைப்பான் கரைசலைப் பயன்படுத்தி, வயலில் உள்ள பண்ணைக் கழிவுகளை எளிதில் மக்க வைக்க முடியும். இதனால், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட 200 கிராம் எடையில் கழிவு சிதைப்பான் கிடைக்கிறது.

கழிவு சிதைப்பான் கரைசல் உற்பத்தி!

டிரம் ஒன்றில் 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வெல்லம் கலந்து, அதனுடன் ஒரு பாட்டில் கழிவு சிதைப்பானை (200 கிராம்) கலக்க வேண்டும்.

பின்னர் அந்த டிரம்மை மூடி வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இருமுறை கரைசலை நன்கு கலக்கிவிட வேண்டும். இதுபோல் தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்து வந்தால், நமக்கு கழிவு சிதைப்பான் கரைசல் கிடைத்துவிடும்.

பயன்படுத்தும் வழிமுறை!

மக்கச் செய்ய வேண்டிய பண்ணைக் கழிவுகளான வைக்கோல், மக்காச் சோளத்தட்டை, பருத்தி மிளார், தென்னை மட்டை போன்றவற்றை தரையில் ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு பரப்பி வைக்க வேண்டும். அதன்மேல், கழிவு சிதைப்பான் கரைசலை 60 சதவீத ஈரப்பதம் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்துவர வேண்டும்.

கழிவுகளின் திடத்தன்மையைப் பொறுத்து, அவை சிதைந்து உரமாவதற்கு ஒரு வாரம், 15 நாள் என தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளும். இதுபோன்ற செய்முறையால் பண்ணைக் கழிவுகள் சிதைந்து, உரமாகிவிடும்.  அனைத்துப் பயிர்களிலும் கழிவு சிதைப்பான் கரைசலை 50 சதவீதம் அளவுக்கு, 7 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். காய்கறி பயிர்களில் கரைசலை 40 சதவீதம் அளவுக்கு 3 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். இதேபோல, பழப் பயிர்களில் கழிவு சிதைப்பான் கரைசலை 60 சதவீதம் அளவுக்கு 7 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். இதனால், பயிர்களில் மகசூல் அதிகரிப்பதுடன், விளை பொருட்களின் தரமும் அதிகரிக்கும். ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இதை கலந்து தெளிக்கக் கூடாது.

பயிர்களின் அனைத்து பருவத்திலும் கழிவு சிதைப்பான் கரைசலை தெளிக்கலாம். இதைதண்ணீரில் கலந்து வயலுக்குப் பாய்ச்சும்போது, மண்ணின் வளமும் மேம்படுகிறது.

கழிவு சிதைப்பான் கரைசலை விதையுடன் கலந்து 30 நிமிடங்கள் உலரவைத்து விதைக்கலாம். இதனால், விதைகளில் முளைப்புத் திறன் அதிகரிக்கும்” என்றார். கழிவு சிதைப்பான் எனப்படும் அமிர்த கரைசல்,  இயற்கை விவசாயத்துக்கு திரும்ப நினைக்கும் விவசாயிகளுக்கு முதல்படியாக இருக்கும் என்றே கூறலாம்.

இயற்கை முறையிலான அமிர்த கரைசல்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடர்களும் இயற்கை முறையிலான அமிர்த கரைசலைத் தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “பொதுவாக, அமிர்த கரைசலை நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அமிர்த கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். இதை தயாரிக்க நாட்டுப்பசுஞ்சாணம் 10 கிலோ, நாட்டுப்பசு கோமியம் 10 லிட்டர், வெல்லம்  250 கிராம், தண்ணீர்  200 லிட்டர் தேவை. முதலில் நாட்டுப்பசுஞ் சாணம்  மற்றும் நாட்டுப் பசு கோமியம்  (பசுஞ்சாணம் புதியதாக இருத்தல் அவசியம், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) ஆகியவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொண்டு, அதில்  வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இப்பொழுது அமிர்த கரைசல் தயார்.ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம்.  பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர இது உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT