தமிழகம்

நில அபகரிப்பு வழக்கு: ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி மனு

செய்திப்பிரிவு

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப். 19-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திருமங்கலம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரிக்காக விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மு.க.அழகிரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மு.க.அழகிரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன்பு தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அழகிரிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், நீதிமன்ற நிபந்தனை அடிப்படையில் கடந்த 13 நாள்களாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறேன். இந்த வழக்கில் என் சார்புடைய விசாரணை முடிந்துவிட்டது. விசாரணையின் போது ஆய்வாளர் தெரிவித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். கால் நகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனவே, ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே. கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பில் வழக்கறிஞர் மோகன் குமார் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் கே.அன்பரசன் வாதிடும்போது, `நில அபகரிப்பு வழக்கை விரைவில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 20 நாளாவது நீதிமன்றம் விதித்த நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே நிபந்தனை தளர்வு கோரி மனு தாக்கல் செய்யலாம்' என்றார். இதையடுத்து, விசாரணையை செப். 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT