ராதாரவி நீக்கம், தேர்தல் நேரத்து நாடகம் என்று திமுகவை கடுமையாக சாடியுள்ளார் தமிழிசை
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவரும், மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம்.ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பலஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அந்நாள் முதல்வர் முதல் கழகப் பேச்சாளர் வெற்றிகொண்டான் வரை பேசிய பேச்சுக்கள் அச்சில் ஏற்றமுடியாத தரம்? என்பதை நாடறியும்.ஜெ.அவர்களை சட்டமன்றத்தினுள்ளே அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்.நீங்கள் செய்வது தேர்தல் காலத்து நாடகம் என்னபதை மக்கள் அறிவார்கள்
இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.