அமைச்சர் சம்பத்தின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்க வலியுறுத்தி, பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட அதிமுகவின் கிழக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் எம்.சி.சம்பத்தும், மேற்கு மாவட்டச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினரான அருண்மொழித்தேவனும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முருகுமாறன், பாண்டியன், சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் அருண்மொழித்தேவன் தலைமையில் தனி அணியாகவும், அமைச்சர் சம்பத் மற்றும் கடலூர் நகர்மன்ற உறுப்பினர்கள் தனி அணியாகவும் செயல்படுகின்றனர்.
விருத்தாசலம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தினகரன் அணியில் உள்ளதால், மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவின்றி, கட்சி நிர்வாகிகள் சிலரின் ஆதரவில் தான் சம்பத் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை அடுத்த ஓறையூரில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினைத் தொடங்கி வைப்பதற்காக பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் ஆகியோர் சென்றபோது, தொரப்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகே, அவர்களது காரை மறித்த அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளரான புதுப்பேட்டை நகர அதிமுக செயலாளர் கனகராஜ், பண்ருட்டி தொகுதி செயலாளர் ராமசாமி உள்ளிட்ட 10 பேர் மருத்துவமுகாமுக்குச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்ததால், எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் கனகராஜ், என்.டி.கந்தன், ராமசாமி மற்றும் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ராஜா, புகழேந்தி, உள்ளிட்டோர் காயமடைந்தனர். இவர்களில் கந்தன், கனகராஜ், ராமசாமி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவனையிலும், ராஜா மற்றும் புகழேந்தி பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இதனிடையே எம்எல்ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வத்தைக் கைது செய்ய வலியுறுத்தி எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை பண்ருட்டியில் சாலை மறியல் நடத்திய நிலையில், அங்கு சென்ற பண்ருட்டி டிஎஸ்பி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் புதுப்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் புகுந்து தாக்கிய எம்எல்ஏ,சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பண்ருட்டி நகர அதிமுகவினர் சுமார் 200 பேர், நகர செயலாளர் முருகன் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து பண்ருட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திலிருந்து சத்யாவின் ஆதரவாளர்கள், மாவட்டப் பொருளாளர் ஜானகிராமன் தலைமையில் சுமார் 250 பேர், அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும், மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்க வேண்டும், சம்பத் தூண்டுதலின் பேரில் எம்எல்ஏ சத்யாவைத் தாக்க முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என வலியறுத்தி ஊர்வலமாகச் சென்று, அதே நான்குமுனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலிலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பண்ருட்டி நகரப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.