தமிழகம்

பிரச்சாரத்துக்கு செல்லாத கூட்டணி தலைவர்கள்: மாற்றுக் கட்சியினர் வாக்குகளைப் பெற பாஜக தீவிரம்

செய்திப்பிரிவு

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துள்ள தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு செல்லாததையடுத்து மாற்றுக் கட்சியினரின் வாக்குகளை பெறுவதில் பாஜக வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த இடைத் தேர்தலை திமுக, விசிக, மமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அதிமுக – பாஜக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, மதிமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதாக கூறினர்.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் தெம்பாக இருந்த பாஜகவுக்கு, நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் உட்பட பலர் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றது பெரும் அதிர்ச்சியை தந்தது. இதையடுத்து, இடைத்தேர்தல் முறையாக நடக்கவில்லையென்றும் அதை ரத்து செய்ய வேண்டுமென்றும் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப் பட்டுள்ளது.

இந்த சூழலில் களத்தில் உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களை அழைத்து பிரச்சாரம் செய்ய வைக்கலாம் என்று பாஜக தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால் அவர்களில் வைகோ, அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை காரணம் காட்டியும், விஜயகாந்த் வேறு சில காரணத்தை சொல்லியும் பிரச்சாரத்துக்கு செல்லாமல் நழுவிவிட்டனர். இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சி உறுப்பினர்களின் வாக்குகளை பெற பாஜகவினர் தீவிரமாக களப்பணி ஆற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறியதாவது:

பிரதான கட்சிகள் போட்டியிடா மல் உள்ளதால் அதிமுக – பாஜக இடையே போட்டி உருவாகியுள் ளது. எங்களது வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர்தான் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். பாஜக நிறுத்திய பெரும்பாலான வேட்பாளர்கள் களத்தில் தான் உள்ளார்கள். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றியை பெறாவிட்டாலும் அதிகளவு வாக்குகளை பெற வேண்டும் என்பது எங் களது குறியாகவுள்ளது. இதனடிப் படையில் எங்கள் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். மாற்றுக் கட்சி தொண்டர்களின் வாக்குகளை பெற்றால்தான் அதிக வாக்குகளை பெற முடியும்.

மாற்றுக் கட்சியினர் பாஜகவை ஆதரிக்க வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கைகள் விடப்பட் டுள்ள சூழலில், தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை சேர்ந்தநிர்வாகிகளையும் சந்தித்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு வருகிறோம். அதிமுகவை வீழ்த்த வேண்டு மென்றால் பாஜக வுக்கு வாக் களிக்க வேண்டும் என்று அவர் களிடம் விளக்கமாக எடுத்து கூறியும் வருகிறோம். பாஜக வேட்பாளர்களும் இதில் தீவிரமாக உள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT