மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவராக இருப்பவர் இளங்கோவன்(52). இவர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் கடந்த 21-ம் தேதி புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, 5 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, கடந்த 23-ம் தேதி சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு வராமல் இருந்த இளங்கோவன், நேற்று கல்லூரிக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர், பாலியல் தொந்தரவு குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் மா.கும்மராஜா, காளியப்பனூர் பகுதியில் மாணவ, மாணவிகளை நிறுத்தி புகாரைப் பெற்றுக்கொண்டு, கல்லூரிக்கு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தாந்தோணிமலை போலீஸார், பேராசிரியர் இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.