தமிழகம்

குற்ற வழக்குகளில் காவல்துறை விசாரணை; உயர் நீதிமன்றம் வேதனை: டிஜிபிக்கு புதிய உத்தரவு

செய்திப்பிரிவு

குற்ற வழக்குகளில் காவல் துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 2018 டிசம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, 264 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  சில உத்தரவுகளை பிறப்பித்தார்.  உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண அடையாள அணிவகுப்பு நடத்தாத காரணத்தால், எந்த ஆதாரமும் இல்லாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றங்கள் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

குற்ற வழக்குகளில் காவல் துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்து விட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதி, எண்ணிக்கைக்காக காவல் துறையினர் வழக்குகளை பதிவு செய்கின்றனரோ என்ற அச்சத்தை வலுப்படுத்துவதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  காவல் துறையினரின் புலன் விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை காண வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.

தமிழகம் முழுவதும் 2018-ம் ஆண்டு டிசம்பர் வரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன? நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் எத்தனை? அவற்றின் முடிவுகள் என்ன? என்பன குறித்த விவரங்களை மாவட்ட வாரியாக நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT