தமிழகம்

வாக்கு கேட்டு வருபவர்களிடம் கல்வியை இலவசமாக தர வலியுறுத்துங்கள்: கல்வியாளர் வசந்திதேவி

செ.ஞானபிரகாஷ்

கல்வியை முழுவதும் இலவசமாக தர வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் வலியுறுத்துங்கள் என்று முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோரிடம் பள்ளிக்கல்வி தொடர்பான கோரிக்கைகளை வழங்கிய பின்பு செய்தியாளர்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறியதாவது:

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் கல்விக்கான கொள்கை அறிக்கை தயாரித்துள்ளது. விரைவில் தேர்தலில் நிற்க உள்ள இந்திய, தமிழக, புதுச்சேரி அரசியல் கட்சிகளுக்கும் தந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இல்லாத ஏற்றத்தாழ்வுகள் கல்வி அமைப்பில் இங்கு உள்ளன. தனியார் மயம், வணிகமயம் இவற்றுக்கு எதிரான அடிப்படை ஜனநாயக நெறிகளின் மேல் இன்றைய மாற்றுக்கல்வி கொள்கை இருப்பது அவசியம்.

அரசியல் கட்சிகளிடம் வழங்கிய கொள்கை அறிக்கையில், கல்வி முழுவதும் இலவசமாக அளிக்க வேண்டும் என்பதை முக்கியமாக அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடமும் மக்கள் இதை வலியுறுத்தி தேர்தல் அறிக்கையில் சேர்த்து நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

கல்வியில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்தபட்சம் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும். தற்போது 3.8 சதவீதம் தான் ஒதுக்கப்படுகிறது. கியூபாவில் 18 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. ஜிடிபியில் அதிகளவு கல்விக்கு ஒதுக்குவது செலவு அல்ல. வருங்கால வளர்ச்சிக்கான முதலீடு

இவ்வாறு வசந்திதேவி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT