அரும்பாக்கத்தில் ரவுடி கொலை வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பழிவாங்குவதற் காக அவர்கள் இக்கொலையைச் செய்திருப்பது போலீஸ் விசார ணையில் தெரியவந்துள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி (39). ரவுடியான இவர் மீது கொலை, மிரட்டல் உட்பட 8-க்கும் மேற்பட்ட வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்று முன் தினம் அரும்பாக்கம் பெருமாள் கோயில் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத் தப்பட்டது. இந்நிலையில் கொலை தொடர்பாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (29) அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (24), கோயம்பேட்டைச் சேர்ந்த கவிராஜ் (24), அதே பகுதியைச் சேர்ந்த பாபு (24) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
8 ஆண்டுகள் திட்டம்
கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கைது செய்யப் பட்டுள்ள சங்கரின் சித்தப்பா வான நாகராஜ் என்பவர் அரும் பாக்கத்தில் 2011-ல் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மற்றொரு சித்தப்பாவான சர வணன் என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு கொலைக்கும் மூல காரணமாக கிருஷ்ண மூர்த்தி இருந்துள்ளதாக சங்கர் முழுமை யாக நம்பியுள்ளார். தந்தைக்கு பின்னர் தங்களை வளர்த்து ஆளாக்கிய சித்தப்பாக்களின் கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை பழி தீர்க்க 8 ஆண்டுகள் திட்டம் தீட்டியுள் ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தியை நண்பர்களு டன் சென்று தீர்த்து கட்டியதாக சங்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தகவலின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறோம்’’ என்றனர்.