மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியே வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்பார் என மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்பதே என் விருப்பம். இவர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்தித்துப் பேசி கூட்டணியில் சேரவேண்டும்.
‘ராகுல் காந்தி பிரதமராக முடியும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது’ என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறுகிறார். அவர் சொன்னால் அது நடக்குமா?
அதிமுக அரசில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளனர். அந்த கூட்டணியை உடைக்க யார் சதி செய்தாலும் நடக்காது. பாஜக மக்கள் விரோதக் கட்சி அல்ல. மீண்டும் அக்கட்சியே மத்தியில் ஆட்சியைப் பிடித்து மோடி பிரதமராக வர வேண்டும். பாகிஸ்தான் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.