தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளங்களில் தேங்கியுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் ஷீட் போட்டு மூடி வைத்துள்ள உற்பத்தியாளர்கள். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான உப்பு சீசன் முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தியான நிலையில், அதில் 16 லட்சம் டன் உப்பு விற்பனையாகாமல் தேங்கியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.
நடப்பு ஆண்டில் எல்நினோ தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெயில் உக்கிரமாக இருந்தது. இதனால் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 7 மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட உப்பை மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில், உப்பளங்களில் உள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் ஷீட் போட்டு தொழிலாளர்கள் மூடி வைத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முழுமையாக முடிவடைந்த பிறகே, அடுத்த சீசனுக்கான பணிகள் தொடங்கும்.
இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் 72 சதவீதம் (18 லட்சம் டன்) தான் உப்பு உற்பத்தி இருந்தது. இந்த ஆண்டு 80 சதவீதம் வரை, அதாவது சுமார் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகியுள்ளது.
ஆனால், சுமார் 4 லட்சம் டன் உப்பு மட்டுமே இதுவரை விற்பனையாகியுள்ளது. 16 லட்சம் டன் உப்பு உப்பளங்களிலேயே தேங்கியுள்ளது. சில உப்பளங்களில் கடந்த ஆண்டு உற்பத்தியான உப்பு கூட இருப்பில் உள்ளது. குஜராத் உப்பு வருகையால் தூத்துக்குடி மாவட்ட உப்புக்கான விற்பனை மார்க்கெட் வெகுவாக குறைந்துவிட்டது. விலையும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.2,500 வரை விலைபோன நிலையில், தற்போது ரூ.1,500-க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. வழக்கமாக உப்பு உற்பத்தி சீசன் ஜனவரி மாதம் தொடங்கும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினால் கூட பரவாயில்லை. கையிருப்பில் இருக்கும் உப்பு கொஞ்சமாவது விற்பனையாகும் என்ற நிலையில்தான் உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.