கிருஷ்ணகிரி அருகே தோட்டத் துக்குச் சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்றது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் யானைகள் கூட்டம் சென்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கர்நாடகாவுக்குச் சென்றன. இதில் 30-க்கும் மேற்பட்ட யானை கள் தமிழக - ஆந்திர எல்லை யிலேயே முகாமிட்டு விவசாயப் பயிர்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன.
இதில் 8 யானைகள் நேற்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தின் வழியாக மேலுமலை காப்புக்காட்டுக்குச் சென்றுகொண்டிருந்தன. அதி காலை 5 மணியளவில் விவசாய நிலத்தில் பணிகளை மேற் கொள்ள ஜீனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகி யோர் வயலுக்கு சென்றுகொண்டி ருந்தனர்.
புளியமரத்தின் அருகே நின்றி ருந்த யானைகள், இவர்களைக் கண்டதும் பிளீறியபடி நெருங்கி வந்தன. அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் அங்கிருந்து ஓடினர். இதில், சரஸ்வதி யானைகள் கூட்டத்திடம் சிக்கிக்கொண்டார்.
ஒரு யானை சரஸ்வதியை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்து யானைகள் நகர்ந்தன. மனைவியை காப்பாற்ற முடியாமல் தவித்த ராஜேந்திரன் யானைகள் அங்கிருந்து சென்றதும் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சரஸ்வதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார். ஆனால் சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகரிக்கும் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் யானை மிதித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். யானை களால் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.