'மோடி கோ பேக்' தமிழக கோஷம் அல்ல என்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6) சென்னை வருகிறார். அவர் மத்திய அரசு விழாவிலும் கூட்டணிக் கட்சியான அதிமுக ஏற்பாடு செய்துள்ள கூட்டணித் தலைவர்களுடனான பிரம்மாண்ட மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
சமீபத்தில் தமிழகத்திற்கு மட்டும் 4 முறை பிரச்சாரத்துக்காக வந்துள்ளார். பிரதமர் மோடி சென்னை வரும் போதெல்லாம், #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் இந்திய அளவில் டிரெண்டாகும். பலரும் இந்த ஹேஷ்டேகில் ஏன் இப்போது மட்டும் வருகிறீர்கள் என்று தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்துவார்கள்.
#GoBackModi என்ற ஹேஷ்டேக் இன்றும் (மார்ச் 6) டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெண்ட் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"மோடி கோ பேக்'' தமிழக கோஷம் அல்ல என்கிற உண்மையை தமிழகத்தில் எங்கு சென்றாலும் உணர முடியும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம் இந்த அந்நியச் சக்திகளுடன் திமுக கூட்டணியினர் கைகோத்துள்ளது தான். இந்தத் தேர்தலில் இக்கும்பலை வேரோடு வீழ்த்துவதுதான்''.
இவ்வாறு எச்.ராஜா தெரிவித்துள்ளார்.