மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கையெழுத்திட்டு பணி நியமன ஆணை அளித்து ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் துணை வட்டாட்சியர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் இரவு நேரக் காவலர் பணிக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். கோபிகிருஷ்ணன் என்பவர் வேலை பெறுவதற்காக அலுவலர் மூலம் ரூ. 2 லட்சம் கொடுத்தாராம். அருக்கு மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்ட பணி நியமன ஆணை கிடைத்தது. இதை தனது உறவினரான ஆட்சியரின் வாகன ஓட்டுநரிடம் காண்பித்துள்ளார்.
அதை வாங்கிய ஓட்டுநர் தனக்குத் தெரிந்த அலுவலரிடம் சரிபார்த்தபோது, அந்த ஆணை போலியானது என்பதோடு, அந்த ஆணையில் ஆட்சியர் பெயரில் போலி கையெழுத்திட்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ.மனோகரன் கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இந்த மோசடி குறித்து விசாரிக்க இலுப்பூர் துணை வட்டாட்சியர் க.தமிழ்மணி தலைமையிலான குழுவை ஆட்சியர் நியமித்தார். விசாரணையில் அலுவலக உதவியாளர் சுந்தரி, இளநிலை உதவியாளர் செந்தமிழ்ச்செல்வியிடம் இருந்து இந்த போலி ஆணை பெறப்பட்டது தெரியவந்தது. இருவரிடமும் தீவிர விசாரணை நடந்தது. இதில் செந்தமிழ்ச்செல்வியிடம் இருந்துகிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், ரேஷன் கடை ஊழியர், அங்கன்வாடி ஊழியர் போன்ற பணிகளுக்கான நியமன ஆணைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்கும் பிரிவில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் செல்வகணபதியின் ஆலோசனையில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் வேலை வாங்கித்தருவதாகக்கூறி பலரிடம் சுமார் ரூ.30 லட்சம் வரை வசூலித்ததும் தெரிந்தது.
இந்நிலையில் விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், அறந்தாங்கி வட்டாட்சியர் தவச்செல்வம் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை வட்டாட்சியர் செல்வகணபதி மற்றும் தற்காலிக பணியாளர்கள் செந்தமிழ்செல்வி, சுந்தரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
செல்வகணபதி இதுபோன்ற பல்வேறு மோசடி விவகாரங்களில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியே வந்தவுடன் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.