தமிழகம்

‘‘காடுவெட்டி குரு மரணம் இயற்கையானதல்ல; பாமக தலைமைக்கு வன்னியர் சமுதாயம் பதில் கொடுக்கும்’’ - குரு மகன் ஆவேசம்

செய்திப்பிரிவு

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல, பாமக தலைமைக்கு வன்னியர் சமுதாயம் உரிய பதிலை சொல்லும் என அவரது மகன் கனலரசன் மற்றும் குடும்பத்தினர் பரபரப்பு பேட்டியளித்துள்ளனர்.

இதுகுறித்து காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மற்றும் குடும்பத்தினர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

பாமக தலைமையை நம்பி இருந்த எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல. பாமக தலைமைக்கு வன்னியர் சமுதாயம் உரிய பதிலை சொல்லும். பிறரை விமர்சித்து பேசுமாறு, குருவை தூண்டிவிட்டு அவரை பலருக்கு எதிரியாக்கியது பாமக.

குரு விமர்சித்த கட்சியினரிடம் பின்னர் பூங்கொத்து கொடுத்து உறவு கொண்டாடியது பாமக தலைமை. குருவை சூழ்நிலைக் கைதியாக பாமகவினர் வைத்திருந்தனர். குருவிற்கு சிகிச்சை அளிக்க அவர்கள் முன்வரவில்லை.

அவருக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் அன்புமணியின் வளர்ச்சிக்கு குரு தடையாக இருப்பதாக கருதினர். எங்கள் குடும்பத்தினருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

SCROLL FOR NEXT