பெரம்பூர் தொகுதியில் நீண்ட பரிசீலனைக்கு பின் அமமுக வேட்பாளர் பி.வெற்றிவேல் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி ஆகியோரின் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார்.
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட கடந்த மார்ச் 19 முதல் 26-ம் தேதி வரை வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு மொத்தம் 68 மனுக்கள் பெறப்பட் டன. அந்த மனுக்கள் மீதான பரிசீலனை, தொகுதி பொது பார்வையாளர் ரஜித் புன்ஹானி முன்னிலையில் தேர்தல் நடத் தும் அலுவலர் எஸ்.கருணாகரன் தலைமையில் நேற்று நடை பெற்றது.
இதில், டிடிவி தினகரனின் ஆதரவாளரும் அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான பி.வெற்றிவேல் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், வேட்பாளர் மீதுள்ள வழக்குகள் குறித்த பகுதியில் பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார். அதை குறிப்பிட்டு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து, வெற்றிவேலின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வேட்புமனு பரிசீலனை அறைக்கு வெளியில் அமர்ந்திருந்த வெற்றிவேல் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து, வெற்றிவேலின் மனு மீது முடிவு எடுப்பது தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
பின்னர் வெற்றிவேல் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி னார். கடைசியில் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பிரமுகர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கூச்சலிட் டனர். உடனே அங்கு குவிக்கப்பட்ட போலீஸார், அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி னர். இந்த தள்ளுமுள்ளு காரணமாக பெண் சுயேச்சை வேட்பாளர் மீனா, வலியால் அவதிப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இத்தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யு.பிரியதர்ஷினி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனுவில் இரு இடங்களில் தனது கணவர் பெயரை குறிப்பிட்டுள்ளார். ஒரு இடத்தில் குறிப்பிடவில்லை. அதை சுட்டிக்காட்டிய பிற கட்சியினர், பிரியதர்ஷினியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நீண்ட பரிசீலனைக்கு பிறகு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக பிரியதர்ஷினி கூறும்போது, “எனது மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு அரசியல் கட்சிகள், ஏற்கெனவே ஆட்சேபனை மனுக்களை தயார் செய்து, தயாராக வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்துள்ளனர். இதை பார்க்கும்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே காட்டுகிறது” என்றார்.
முன்னதாக திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.