எந்த மாதிரியான வழக்குகளை விசாரிப்பதற்காக எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது என தலைமைப் பதிவாளர் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசு குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கை மற்றும் கேள்வி - பதில் ஆகியவை முரசொலி பத்திரிகையில் வெளியானது.
இது தொடர்பாக கருணாநிதி மீதும், முரசொலி ஆசிரியர் செல்வம் மீதும் ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
பின்னர் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், தன் மீதான வழக்குகள் மாற்றப்பட்டதையும் எதிர்த்து முரசொலி செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முரசொலி செல்வம் மீதான வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறந்த பிறகுதான் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதாகவும், வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த மக்கள் பிரதிநிதியான கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில், அந்த வழக்கை முடித்துவைக்காமல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என்றும் வாதிடப்பட்டது.
கருணாநிதி மறைந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத தன் மீதான அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்றும் முரசொலி செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை வழக்கில் சேர்த்த நீதிபதி, எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் எந்த மாதிரியான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
மேலும், வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை என்ன ஆகும் என்பது குறித்து அரசுத் தரப்பும், மனுதாரர் தரப்பும் தங்கள் விளக்கங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.