மதுரையில் திமுகவினரை திமுகவினரே கொல்லும் கொடூர வரலாறு தொடர்கிறது. சமீபத்தில் நடந்த கொலை விவகாரத்திலும்கூட கொல்லப்பட்டவர்களும், போலீஸாரால் தேடப்படுபவர்களும் திமுகவினராகவே இருக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் 20.5.2003-ல் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைதானவர்களில் மு.க.அழகிரி, பி.எம்.மன்னன், முபாரக் மந்திரி உள்ளிட்டவர்கள் திமுகவினர். 31.1.2013-ம் தேதி திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கொலையான வழக்கில் ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளி’யாக இருக்கும் அட்டாக் பாண்டி, திமுக தொண்டரணி அமைப்பாளர் பதவியை வகித்தவர்.
இந்தச் சூழலில் கடந்த புதன்கிழமை புதூர் ஐ.டி.ஐ. அருகே 1-ம் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டார். இவரது தந்தை வேலு திமுகவில் வட்ட செயலர், தொண்டரணி அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்தவர். இந்தக் கொலை தொடர்பாக மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் முகேஷ் சர்மா (34) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முகேஷ் சர்மாவின் மாமனார் வி.கே.குருசாமி திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியை வகித்தவர்.
அதேநாளில் தல்லாகுளம் கண்மாய்கரையில் கொலை செய்யப்பட்ட கருப்பையாவும் (35) திமுகவைச் சேர்ந்தவர்தான். இவர் 2-ம் பகுதி முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் கருணாநிதியின் கார் டிரைவராக இருந்தவர். இந்த வழக்கில் விசாரணை வளையத்தில் இருக்கும் நவநீதகிருஷ்ணன், திமுக முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போவது கட்சி நலம்விரும்பிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மூத்த திமுக நிர்வாகி கூறியபோது, மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் மதுரை வரும்போதும், மதுரையில் கடந்த ஓராண்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களைப் பட்டியலிடுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக மதுரையில் நடந்து வரும் கொலைகளில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களும், சம்பவம் செய்தவர்களும் திமுகவினராகவே இருக்கிறார்கள். இரு தரப்புமே குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பதால், இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஆளுங்கட்சியை விட திமுகவுக்கே கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ரௌடியான அப்பள ராஜாவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கக்கூடாது என்ற எதிர்ப்பை மீறி, 2012-ல் 9-ம் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இப்போது அவரது ஆதரவாளர்கள் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தால், ஆளுங்கட்சியை விட திமுகவுக்கே கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது.
இதை எல்லாம் எதற்காக என்றால், மதுரையில் ஸ்டாலின் கை ஓங்கிய பிறகு ரௌடித்தனம் குறைந்துவிடும் என்று நாங்கள் எல்லாம் நம்பியது வீண்போய்விட்டது. எனவே, அடுத்தவாரம் முதல் நடைபெற உள்ள உட்கட்சித் தேர்தலிலாவது குற்றப்பின்னணி இல்லாதவர்களை பதவிக்கு கொண்டுவர வேண்டும். தவறினால், மதுரை திமுக மேலும் பாதிக்கப்படும் என்றார்.