திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடி காந்திநகரில் துரைமுருகனின் வீடு உள்ளது. இங்கு நேற்றிரவு மனோஜ், முரளிதரன், சதீஷ் என்கிற மூன்று பேர் கொண்ட குழுவினர் ‘வருமானவரித் துறை அதிகாரிகள்’ என்றுகூறி, சோதனை நடத்த வந்துள்ளனர்.
அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை கூறப்படுகிறது. அவர் வருவதற்குள், வீட்டில் இருந்தவர்களின் அனுமதியுடன் அந்த அதிகாரிகள் ஹாலில் சென்று அமர்ந்திருந்தனர். வீட்டிற்கு வந்த துரைமுருகனிடம், தங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் என்றும், சோதனை நடத்தப்போகிறோம் என்றும் அந்த குழு கூறியுள்ளது.
உடனடியாக, தன்னுடைய வழக்கறிஞர்களை துரைமுருகன் வரவழைத்தார். அந்த குழுவிடமிருந்து, வழக்கறிஞர்கள் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்தனர், அதில், ‘அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பார்வையாளர்கள்’’ என்று முரண்பட்டுக் குறிப்பிடப்பட்டிருந்ததால், வழக்கறிஞர்கள் சர்ச் பண்ண அனுமதிக்க முடியாது என வாக்குவாதம் செய்தனர்.
அதன்பிறகு, வருமானவரித் துறை அதிகாரி விஜய் தீபன் அங்கு வந்துள்ளார். `என்னுடைய தலைமையிலான குழுவினர் தான் அவர்கள்’ முறையாக டிஜிபி உத்தரவின்பேரில் மாவட்ட எஸ்பி கடிதம் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டு அவரது அனுமதியின்பேரில்தான் வந்துள்ளோம் என்று வழக்கறிஞர்களிடம் கூறிய பின்னர் அனுமதிக்காமல் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பின் துரைமுருகன் வீட்டில் காலைமுதல் சோதனை நடந்தது.
சோதனையில் மொத்தம் ரொக்கப்பணம் ரூ.19 லட்சம் கைப்பற்றப்பட்டது. அதில், அவரது மகன் கதிர் ஆனந்த் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தொகையை அங்கேயே விட்டு விட்டு, அதிகப்படியாக கணக்கில் வராத மீதமுள்ள ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலையிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நடத்திவரும் கல்லூரியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துரைமுருகன் வீட்டிலிருந்து வாக்காளர்கள்/ வார்டு குறித்த தகவல், பணப்பட்டுவாடா குறித்த தகவல் அடங்கிய சில தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதுகுறித்து துரைமுருகனிடம் அதிகாரிகள் விசாரித்தபோது அவை குப்பைக்காகிதங்கள் என்று அவர் கூறியதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.