பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு தலைமறைவாக இருக்க உதவிய கல்லூரி தோழியைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எம்பிஏ பட்டதாரியான திருநாவுக்கரசு 2 ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். சில நாட்களில் நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். அதன்பின்னர், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த பெண் திருநாவுக்கரசை பிரிந்து சென்றுவிட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திருநாவுக்கரசு, காதல் மனைவி பிரிந்து சென்றதால், பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு, அவர்களை பழிவாங்க முடிவு செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
திருநாவுக்கரசு கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த சேலத்தைச் சேர்ந்த மாணவியுடன் நெருங்கிப் பழகியுள்ளார். அவர் மூலமாக ஏராளமான பெண்களின் செல்போன் எண்கள் திருநாவுக்கரசுக்கு கிடைத்துள்ளன. அந்த எண்களை திருநாவுக்கரசு அவரது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தபோது, அந்தபெண் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அவரிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை பெற முடியும் என சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.