ஆம்பூர் டவுன் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை ஆம்பூர் பைபாஸ் சாலை ராஜீவ்காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை போலீஸார் வழிமறித்தனர்.
ஆனால், போலீஸார் தடுப்பை மீறிச் சென்ற லாரியை ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர்.
அதில், ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. தொடர்ந்து லாரியில் இருந்தவர்களை கைது செய்ய முயன்றபோது, அதில் இருந்தவர்கள் லாரியை ஏற்றிக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், லாரியில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், ஒருவர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் வினோத்குமார் (23) என்பதும், மற்றொருவர், அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜ்குமார் (27) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.