சென்னையில் கடந்த 4 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 குறைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதற்கு ஏற்ற நேரம் இது என நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கம் அதிகபட்சமாக ரூ.208 குறைந்தது. வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.56 குறைந்தது. சனிக்கிழமை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.2,511-க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ. 20,088-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இல்லை.
இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6 குறைந்து ரூ.2,505-க்கும், ஒரு சவரன் ரூ.48 குறைந்து ரூ.20,040-க்கும் விற்பனையானது.
நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.2,499-க்கும், ஒரு சவரன் விலை ரூ.19,992 என்ற அளவுக்கும் குறைந்தது. இதனால் ஏராளமானோர் நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர்.
இதுகுறித்து தங்க நகை வியாபாரி சந்தகுமார் கூறுகையில், ‘‘உலகளவில் பங்குச் சந்தையில் வர்த்தகம் உயர்ந்து வருகிறது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் விலை தொடர்ந்து
சரிவதால் முதலீட்டாளர்கள் சேமிப்பில் வைத்து இருந்த தங்கத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர். பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில் தங்கம் விலை குறைந்து கொண்டு இருக்கிறது. இந்த பொன்னான சந்தர்ப்பத்தை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என்றார்.