தமிழகத்தில் 9 நகரங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவாகி இருந்தது.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக வெப்பநிலை உயர்ந்து வருகிறது. 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகும் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
கோடை தொடங்க இருப்பதால் பல இடங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.
மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவீட்டின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, வேலூர், சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு உள் மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட உயர்ந்தே இருக்கும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.