தமிழகம்

அரசியல் கத்துகுட்டி பிரேமலதா: பொன்முடி விமர்சனம்

செய்திப்பிரிவு

அரசியல் தலைவர்களை, பத்திரிகையாளர்களை தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வதன்மூலம் அரசியலில் இன்னும் தான் வளரவே இல்லை என்பதையும், அரசியல் கத்துக்குட்டி என்பதையும் பிரேமலதா நிரூபித்துள்ளார் என திமுக தலைவர்களில் ஒருவரான பொன்முடி விமர்சித்துள்ளார்.

கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து குழப்பத்தில் இருந்த தேமுதிக எந்தப்பக்கம் தான் செல்கிறோம் என்பதை உறுதியாக தெரிவிக்காமல் இருந்தனர். திமுகவுடனும், அதிமுகவுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதே தங்கள் கட்சியின் நிர்வாகிகளை திமுக தலைமையிடம் அனுப்பி வைத்தது ஊடகங்கள் இடையே பரபரப்பானது. இதை கடுமையாக விமர்சித்த பிரேமலதா நம்பித்தானே எங்கள் ஆட்கள் உங்கள் வீட்டுக்கு வந்தார்கள் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவது இதுதானா? என்று கேட்டார்.

திமுகவை தில்லுமுல்லுகட்சி என்று தெரிவித்தார். அதே நேரம் அதிமுகவையும் விமர்சித்தார் எங்களால்தான் ஆட்சிக்கே வந்தார்கள், தற்போதும் எங்களால்தான் ஆட்சியில் உள்ளனர் என்று தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்படுகிறது.

இதுகுறித்து திமுக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:

அரசியலில் ஒரே நேரத்தில் இரண்டுக்கட்சிகளுடன் கூட்டணி பேசிய கட்சி அவர்கள்தான், அவர்கள் வாக்குவங்கி என்னவென்று அவர்களுக்கு தெரியும். மோடிக்கு எதிரான அலை இங்கு உள்ளது. எங்களோடு மதவாத சக்திகளை எதிர்க்கும் வகையில் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

விஜயகாந்தை கருணாநிதியைப்பார்க்க அனுமதிக்கவில்லை என்பது சரியல்ல சுதீஷை அனுமதிக்கும்போது விஜயகாந்தை அனுமதிக்காமல் இருப்போமா? அவர் கட்சியில் இருந்து வெளியேறியவரே கேட்டுள்ளாரே? அவர்கள் அண்டப்புளுகு புளுகினால் என்ன அர்த்தம்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அரசியலில் கத்துக்குட்டியாக இருப்பதை பிரேமலதா அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் நடந்துக்கொண்ட விதமாகட்டும், அவர் கோபப்பட்டு நடந்துக்கொண்டது,  அவர்கள் கூட்டணி சேரப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிற அதிமுகவையே விமர்சித்ததாகட்டும், பாஜகவை விமர்சித்ததும் அவர் அரசியலில் அரிச்சுவடி அறியாதவர் என்பதை நிரூபித்துள்ளார்.

ஆகவே தவறான செய்திகளை அண்டப்புளுகாக கருணாநிதியை சந்திக்க விஜயகாந்தை அனுமதிக்கவில்லை என்று கூறுவது சரியல்ல. நாங்கள் அன்று ஸ்டாலினுடன் இருந்தவர்கள் எங்களுக்கு நடந்தது தெரியும். இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT