தமிழகம்

நிதி சீர்திருத்தம் - ஓர் உலக அனுபவம்!

டாக்டர் பி.கிருஷ்ணகுமார்

அரசுகளின் நிதி சார்ந்த சீர்திருத்தங்கள் என்பது சாமான்யமான ஒரு விஷயமில்லை. உலக அரசாங்கங்கள் பலவும் கடந்த சில தசாப்தங்களாகவே தாங்களாக விரும்பியோ அல்லது மற்ற வளர்ந்த நாடுகளின் நிர்பந்தத்தினாலோ அரசு நிதி சார்ந்த சீர்திருத்தங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்திக் கொண்டே வருகின்றன. இந்த சீர்திருத்தங்களை செய்வதில் தயக்கம் காட்டும் நாடுகளுக்கு உலகளாவிய நிதி நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடியை உருவாக்கி அவற்றை பணியவைக்கின்றன. இந்த  தொழில்நுட்பம் மற்றும்தொலைத்தொடர்பு முன்னேற்றங்க ளுடன் கூடிய சீர்திருத்தங்களை ஒருநாடு நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் போது, அதற்குத் தேவையான சிறப்பு நிபுணத்துவம் என்பது அதிக அளவில் தேவைப்படுகின்றது.

என்ன சொல்கிறது?

நூல் ஆசிரியர்  சுப்ர ராமமூர்த்தி இந்தத் துறையில் உலகளாவிய அளவில் புகழ்பெற்ற ஒரு நிபுணர். தான்சானியா, பப்புவா நியு கினியா, கஜகஸ்தான், ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகளான இராக் மற்றும் பாலஸ்தீனம் என கிட்டத் தட்ட இருபத்திஐந்து நாடுகளுக்கு அந்த நாட்டு அரசாங்கங்கள் இந்த வகை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்து வதில் தீவிரமாக ஒரு நிபுணராக பணி யாற்றியவர். வெறுமனே புரியாத ராஜதந்திர விஷயங்களை பேசுவதை தவிர்த்துவிட்டு பல்வேறுவிதமான கலாச்சாரம், வரலாற்று மரபு மற்றும் அரசுப் பணியாளர்களின் மனோநிலை போன்றவை நிலவும் நாடுகளில் இவ்வித நிதிசார்ந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முயலும்போது, என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது என்பதை தெளிவாக  இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

ஆபத்தும் உண்டு!

தொழில் சார்ந்த ஆபத்துகள் அதிக அளவில் இருக்கும் பணியாகவே இவருடைய பணியை நாம் புரிந்து கொள்ளமுடிகின்றது. உதாரணத்துக்கு, தான்சானியாவில் இவர் ஒரு இத்தாலிய கட்டுமான நிறுவனத்தின் பணிகள் குறித்து தணிக்கை செய்து பல மில்லியன் டாலர் நிதி மோசடிகளை விசாரித்த போது இவருடைய பெயர் அந்த நாட்டு பத்திரிகைகளில் பெரிய அளவில் பிரபலப்படுத்தப்பட, இவருடைய மனைவி இவருடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று மிகவும் பயத்துடன் இருந்தார் என்றும் அந்த சமயத்தில் தான்சானியாவின் ஆடிட்டர் ஜெனரல் இவருக்கு பெரியதொரு பக்கபலமாக இருந்தார் என்றும் தன்னுடைய அனுபவத்தை புத்தகத்தின் முன்னுரையிலேயே கூறியுள்ளார்.

இவருக்கு கையூட்டு கொடுத்து சரிக்கட்ட நடந்த முயற்சிகளும், அரசியல்ரீதியாக இவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களும் கொஞ்சநஞ்சமல்ல என்பதையும் பதிவு செய்துள்ளார். ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் நிமித்தப்படி சில நாடுகளில் இவர்போன்று சீர்திருத்தம் சார்ந்த பணிகளைச் செய் பவர்கள், அவர்கள் அந்தப் பணிகளை செய்யும் போது எதிர்கொண்ட அச்சுறுத்தல் களை அந்த நிறுவனங்களுக்கு தரும் அறிக்கைகளில் பதிவு செய்யும் பழக்க மில்லை. ஏனென்றால், இந்த நிறுவனங்கள் இவற்றை பெரியதாக கண்டுகொள்ளாது.  அவர்களைப் பொறுத்தவரை தொழில்நுட்ப உதவியை அந்தந்த நாடுகளுக்கு வழங்குவது மட்டுமே முக்கியமான விஷய

மாக இருக்கும் என்கின்றார் நூலாசிரியர். அதிர்ஷ்டவசமாக இவருடைய தலை மைகள் இந்தவிதப் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு அதற்கேற்றபடி நடந்துகொண்டும் பாராட்டுகளை தெரிவித்தும் வந்தனர் என்பதையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

தணிக்கை வேண்டும்!

தான்சானியா, பப்புவா நியு கினியா, நமீபியா, கஜகஸ்தான், ரஷ்யா,  இராக், பாலஸ்தீனம், குவைத், சீனா, ஜோர்டான், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, உஸ்பெகிஸ்தான், கத்தார் போன்ற பதினைந்து நாடுகளில் பணிபுரிந்த அனுபவங்களை தனித்தனி அத்தியாயங்களாக தந்துள்ளார் ஆசிரியர். தான்சானியாவில் உஜாமா என்ற அரசுப் பண்ணைகளை உருவாக்குதல், தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்துதல், கல்வி நிலையங்களை உருவாக்குதல், ஆரம்ப சுகாதார வசதிக்கான நிலையங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு எக்கச்சக்கமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த  நிதி சரியாக உபயோகப்படுத்தப்படுகின்றதா? திட்டமிட்ட பலன்கள் கிடைத்ததா? எதை நினைத்து பட்ஜெட் போடப்பட்டதோ அந்த முடிவுகள் எட்டப்பட்டனவா? செய்கின்ற செலவு கிடைக்கின்ற பலனை அடையத்தானா? கிடைக்கின்ற பலன் செய்யும் செலவுக்கு ஈடானதுதானா? என்பதற்கெல்லாம் தணிக்கை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது.

‘நான் செலவு செய்யும் பணத்திற்கு சரியான மதிப்பு’ என்ற தணிக்கை முறையை உருவாக்கினேன். அந்த நாட்டின் சிஏஜி அவர்களிடம் மன்றாடி அதற்கு நாட்டின் தலைவரிடம் அனுமதி பெற்றுத்தரச் சொன்னேன்.  அந்த தணிக்கையை நீண்டகால அடிப்படையில் மேற்கொண்டபோது நல்ல விஷயங்கள் பலவும், பல எதிர்மறை விஷயங்களும் வெளியே வந்தன.

நல்லவை என்று பார்த்தால் பொதுவான கல்வி அறிவு சதவீதம் அதிகரித்தும், சிறு குழந்தைகள் மரணமடையும் விகிதம் குறைந்தும், நாட்டில் தொலை தூரத்தில் இருக்கும் ஊர்களில் தொலைத்தொடர்பு வசதி உருவானதுமாக இருந்தது. அதே சமயம் எதிர்மறை விஷயங்கள் என்று பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் பல  இருந்தன. கோதுமை விளைவிப்பதற்கான செலவீனம் அரசு விவசாயப் பண்ணைகளில் எக்கச்சக்கமாக உயர்ந்திருந்தது.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை யின் விலைக்கும் உள்ளூரில் தனியார் விவசாயத்தில் விளைவிக்கப்படும் கோதுமை உற்பத்தி செலவுக்கும் அரசுப் பண்ணையின் செலவுக்கும் ஒப்பீடு செய்து பார்த்தால் கண்ணைக்கட்டியது. தனியார் பண்ணைகள் அரசுப் பண்ணைகளை விட இரு மடங்கு உற்பத்தி அதிகமாக செய்தன. பல சாலைகள் எந்தவித உபயோகமும் இல்லாததாக போடப்பட்டிருந்தன. சீனாவில் இருந்து விவசாயத்துக்காக வாங்கப்பட்ட பல ராட்சத இயந்திரங்கள் தான்சானியாவின் தட்பவெப்ப நிலை மற்றும் சூழலில் உபயோகப்படுத்த முடியாதவகையில் இருந்தன. தணிக்கை அறிக்கையில் இதையெல்லாம் குறிப்பிட்டு சரிசெய்யச்சொல்லியிருக்கிறார். நிதி அமைச்சகம் அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டபோதிலும் சரிசெய்தல் என்பது ஆமை வேகத்தில் அரைமனதுடன் நடந்தது என்பதுதான் வருத்தமான விஷயம் என்கின்றார் ஆசிரியர்.

நல்லதொரு அனுபவம்!

பப்புவா நியூ கினியா ஒரு இயற்கை வளம் செறிந்த நாடு. தங்கம்,  கச்சா எண்ணெய் மற்றும் தாமிரம் போன்ற வளங்கள் நிறைந்த இந்த நாட்டின் வளர்ச்சியில் ஆஸ்திரேலிய மற்றும் ஏனைய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துவந்தன. அந்த நாட்டின் கரடுமுரடான நிலப்பரப்பு வெளி நாட்டவர்கள் அங்கே வந்து சிவில் வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுவதற்கு தடை யாக இருந்தது.

அரசாங்கத்துக்கும் விவசாயம் குறித்த வளர்ச்சிப்பணிகள் மற்றும் நவீன மயமாக்குதல் போன்றவற்றிலும், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை உருவாக்குவதிலும் நாட்டமில்லாமல் இருந்தது. அந்த நாட்டில் நூலாசிரியர் சிஎஃப்டிசி (காமன்வெல்த் ஃபண்ட் பார் டெக்னிக்கல் கொலாபரேஷன்) வாயிலாக பணிபுரிந்துள்ளார். அவருடைய ஒப்பந்தம் முடிந்தபின்னர், அந்த நாட்டின் அரசாங்கம் நிதித் துறையில் துணைச் செயலராகப் பணியாற்றும்படி அவரை வேண்டிக்கொண்டதை ஏற்கவில்லை. அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நூலாசிரியரை ஆடிட்டர் ஜெனரல் பதவியை ஏற்கச்சொன்னார்கள். ஆனால் அப்போது அவர் செய்துகொண்டிருந்த சீர்திருத்த பணிகள் கெட்டுவிடும் என்பதால் அதை ஏற்கவில்லை. அங்கே மேற்கொண்ட சீர்திருத்தங்களில் மிக முக்கியமானதாக கணினிமயமாக்கியதைச் சொல்லலாம் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றத்துக்கான செயல்!

மலாவி நாட்டில் நூலாசிரியர் பணி யாற்றியபோது, எப்படி அயல்நாட்டு நன்கொடைதாரர்கள் உள்நாட்டில் இருக்கும் அரசியல் நிலை பற்றி கவலைப்படாமல் கண்ணை மூடிக்கொண்டு உதவிசெய்வதை உணர்ந்தார். கஜகஸ்தானில் 2002-ம்  ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு புதிய வருவாய் மந்திரி பதவி ஏற்றார். ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிதித் துறை கணினிமயமாக்கல் ஒப்பந்தங்களை புறந்தள்ளி விட்டு அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை அவர் வழங்க முயற்சித்தார்.

இதற்கு ஏதுவாக அவர் பதவி ஏற்றவுடனேயே வெளியிலிருந்து பணியாளர்களை வருவாய்த் துறைக்கு மாற்றம் செய்து கொண்டுவந்து ஏற்கெனவே இருந்த சீனியர் மற்றும் கணினிமயமாக்கலில் ஆரம்பத்திலிருந்தே தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்த பணியாளர்களை புறந்தள்ளினார். இதில் ஏதோ உள்குத்து இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து ஆய்ந்து பிரதம மந்திரியிடம் நூலாசிரியர் அறிக்கைஅளித்துள்ளார். அவர் ஒரு கேபினட் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அதில் நூலாசிரியரின் எண்ணத்தை சொல்லச் சொன்னார்.

அவர் கூறிய விஷயங்கள் அதிர்வை ஏற்படுத்தியதால், அவருடைய நிலைப்பாட்டை எழுத்துமூலம் தரச்சொன்னார்கள். அன்றே என்னுடைய பணி நிறைவடைவதால் எழுத்துமூலம் கொடுத்துவிட்டு அவர் அந்நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். சிலநாட்களுக்குப் பிறகு அந்த மந்திரியின் பதவி பறிக்கப் பட்டுவிட்டது என்றும் பழையபடி கணினி மயமாக்கல் ஏற்கெனவே திட்டமிட்டமடி செயல்படுத்தப்படுவதும் தெரியவந்தது.

மாறுபட்ட அனுபவம்!

பிலிப்பைன்சில் நூலாசிரியர் உலக வங்கிக்காக பணியாற்றச் சென்ற காலம் மிகக்குறைவு என்பதால், பல மீட்டிங்குகளை திட்டமிட்டு வேகமாக செயல்படுத்த முயன்றுள்ளார். கல்வித் துறைக்கு உலக வங்கி நிதி வழங்க இருந்தது. அதற்கான அதிகாரிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்து கூட்டம் நடக்கும் இடத்துக்கு சரியான நேரத்திற்குச் சென்றால் ஒருவர் கூட கூட்டத்துக்கு வரவில்லை. எங்கே என்று கேட்டால் அதிகாரிகள் அனைவரும் அலுவலகத்தினுள்ளேயே இருக்கும் டேபிள் டென்னிஸ் கோர்ட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். இது போன்று தான் சந்தித்த பல்வேறு நடைமுறை சவால்களையும், தொழில் ரீதியான சாவால்களையும் விளக்கமாக சொல்லியுள்ளார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

உலக நாடுகளின் அரசாங்கங்களின் செயல்பாடு எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ள விரும்புபவர்களும், சீர்திருத்தம் செய்ய முயலும்போது என்னென்ன சிக்கல்கள் வரக்கூடும் என் பதை அறிந்துகொள்ள விரும்புபவர்களும், அரசாங்கமும், அரசியல்வாதிகளும் எந்தமாதிரியான போக்கினை இது போன்ற சீர்திருத்தங்களை எடுக்க முயலும்போது கையாளுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் கட்டாயம் ஒரு முறை இந்தப் புத்தகத்தை படிக்கலாம்.

நூல் ஆசிரியரைத் தொடர்பு கொள்ள... ramas98@hotmail.com

SCROLL FOR NEXT