தமிழகம்

கல்வி,வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரிய மனுமீது தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கை, திருநம்பிகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கை  பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த பொது நல வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கிரேஸ்பானு தரப்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கைகளையும், திருநம்பிகளையும் தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும், எந்த ஒரு பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட வேண்டும்.” என  வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் அரசின் நிலை குறித்து இரண்டு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT