தமிழ்நாட்டில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளில் சுமார் 200 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனர். இதனால், இந்த உறுப்புகளுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, ஏற்கெனவே காத்திருப்பவர்களுக்கு மாற்று உறுப்புகளை வழங்கும் நடைமுறைகளும் தாமதமாகிறது.
இதனால், பல மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ள நோயாளிகளைக் கண்டறியும் பணியில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் ஈடுபட்டுள்ளது.
சிறுநீரக மாற்று உறுப்புக்காக காத்திருப்போரில் கிட்டத்தட்ட 180 நோயாளிகளும், கல்லீரல் மாற்றுக்காக காத்திருப்போரில் 20 நோயாளிகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனர். அதில், ஒருவர் 9 மருத்துவமனைகளிலும், மற்றொருவர் 4 மருத்துவமனைகளிலும் பதிவு செய்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், மாற்று உறுப்புகளுக்காகப் பதிவு செய்துவிட்டு, செயலற்ற நிலையில், அதாவது இறந்தவர்கள், மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், அதற்கான நடவடிக்கைகளைப் பின்தொடராதவர்கள் அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் என சுமார் 900 நோயாளிகளைப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனைகள் அத்தகையை பட்டியலை புதுப்பிக்காமல் இருந்ததே இதற்குக் காரணம் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் உறுப்புகள் கொண்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, பதிவு செய்துள்ள உறுப்பு செயலிழந்து இறுதி நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, அவர் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையில் தனிநபர் அடையாள எண் வழங்கப்படும். இதில் பதிவு செய்ய ரூ.1,000 செலுத்த வேண்டும். அந்த நோயாளிகள், வேறு மருத்துவமனைகளில் பதிவு செய்யவில்லை என்பதைச் சோதிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உண்டு.
வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுதல்
ஒருவேளை, அந்த நோயாளி வேறு மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தால், அவர் செல்லும் மருத்துவமனையிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய விதிகளின்படி, வேறு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளியின் பெயரை, அவர் முன்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
ஆனால், பல நோயாளிகள் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. "அறிந்தோ அறியாமலோ, கிட்டத்தட்ட 200 நோயாளிகள் பல மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனர். தங்களின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டோ, துணை பெயர், இனிஷியலை நீக்கியோ, பிறந்த தேதியை மாற்றியோ, முகவரியில் சிறு திருத்தங்கள் செய்தோ பல மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளனர்" என்கிறார், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய உறுப்பினரும் செயலாளருமான ஆர்.காந்திமதி.
தொடர் சோதனைகள் மூலம் இதனை தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் கண்டறிந்துள்ளது. இதனைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், நோயாளியின் ரத்தப்பிரிவின் அடிப்படையில் அத்தகைய நோயாளிகளை வடிகட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
"காத்திருப்போரின் பட்டியலில் உள்ள அத்தகைய நோயாளிகளை வடிகட்டும் பணி பாதி முடிந்துவிட்டது. நோயாளிகளை அழைத்து அவர்களின் பதிவுகளை சரிபார்க்கக் கோருகிறோம். சிலர், பல மருத்துவமனைகளில் தெரிந்தே பதிவு செய்துள்ளனர், மற்றும் சிலருக்கு அது தெரியவில்லை. இந்தப் பட்டியலை மாதந்தோறும் புதுப்பிக்க வேண்டும் என, மருத்துவமனைகளை எப்போதும் அறிவுறுத்துகிறோம்" என்கிறார் காந்திமதி.
பட்டியலைச் சரிபார்த்து, அத்தகைய நோயாளிகளின் பெயர்களை நீக்குமாறு மருத்துவமனைகளை அறிவுறுத்தி வருவதாக காந்திமதி தெரிவித்தார்.
"மருத்துவமனைகளுக்கு இதுகுறித்து மின்னஞ்சல் அனுப்பி வருகிறோம். மாற்று உறுப்புகளுக்காக காத்திருக்கும்போதே இறந்தவர்கள், மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், பல மருத்துவமனைகளில் பதிவு செய்தவர்களின் பெயர்களை மருத்துவமனைகள் நீக்க வேண்டும்.
பல மருத்துவமனைகளில் பதிவு செய்தல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். பல மருத்துவமனைகளில் பதிவு செய்தால், நோயாளிகளுக்குப் பலன் இல்லை. நோயாளிகள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் காந்திமதி.
இதுகுறித்து மேலும் விவரங்களை அறிந்துகொள்ள தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தை 044-2533676 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.