தமிழகம்

6.5 கிலோ தங்கக்கட்டிகளுடன் ஊழியர் ஓட்டம்: நகைப்பட்டறை அதிபர் புகார்

செய்திப்பிரிவு

தனது பட்டறையில் வேலைச் செய்யும் ஊழியர் 6.5கிலோ தங்கக்கட்டிகளை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதாக நகைப் பட்டறை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் சிசிடிவி பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர்.

சென்னை, பூங்கா நகர் அனுமந்தராயன் தெருவில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் சுகாஷ் (37). இவரது கடையில் ராகுல் என்கிற வட மாநில இளைஞர் வேலைப்பார்த்து வந்தார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். நம்பிக்கையான ஊழியராக ராகுல் விரைவில் மாறியதால் அவரை நம்பி தங்க நகைகளை, தங்கக்கட்டிகளை உரிமையாளர் சுகாஷ் கொடுத்தனுப்புவாராம்.

இந்நிலையில் கடந்த 25-ம்தேதி ராகுல் நகைப்பட்டறையில் இருந்த 6.5 கிலோ தங்க கட்டிகளை திருடிக் கொண்டு ஓடி விட்டார். கடையிலிருந்த தங்கத்தை காணாமல் தேடிய உரிமையாளர் ஊழியர் ராகுலும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து ராகுலை பல இடங்களில் தேடியுள்ளார்.

போலீஸில் சொல்லாமல் பிடித்து விடலாம் என முயற்சி எடுத்தும் ராகுல் கிடைக்ககாததால் இறுதியாக நேற்றிரவு யானைகவுனி போலீசில் தங்க கட்டிகள் தனது பட்டறை ஊழியர் தங்கக்கட்டிகளை திருடிப்போனது தொடர்பாக புகார் கொடுத்தார்.

புகாரைப்பெற்ற யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கக்கட்டிகளை திருடிச் சென்ற ராகுலை தேடி வருகின்றனர். பட்டறை மற்றும் அங்குள்ள தெருக்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ராகுல் தங்கக்கட்டிகளுடன் சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து 25-ம் தேதிமுதல் சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT