தமிழகம்

‘குற்றப் பரம்பரை’ எனக்குறிப்பிட்டது திமுகவை: தமிழிசை பல்டி

செய்திப்பிரிவு

கற்ற பரம்பரை நான் குற்றப்பரம்பரை அல்ல என தமிழிசை சர்ச்சைப்பதிவு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் நான் குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி எழுதவில்லை, திமுகவைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன் என ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு மீதான பரிசீலனை சற்று நேரம் பிரச்சினையாகி ஏற்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக கோரியிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குற்ற வழக்கு இல்லை. நான் கற்ற பரம்பரை. குற்ற பரம்பரை அல்ல.கணவரும் அவ்வாறே.வீண் வதந்தி? தோல்வி பயம்???" என பதிவிட்டார்.

பதிவு செய்யவேண்டும் என்கிற நோக்கில் எதுகை மோனையில் கற்றப்பரம்பரை மற்றும் குற்றப்பரம்பரை என பதிவிட்டிருப்பது தமிழிசைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட சமுகத்தினர் பிரிட்டீஷ் ஆட்சியில் குற்றப்பரம்பரை என அறிவிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டனர், அதற்கு எதிராக முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் போராடி சுதந்திரத்துக்குப்பின் அது நீக்கப்பட்டு நீர்த்துப்போனது. அதன் பின்னர் குற்றப்பரம்பரை என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் அது தேவையற்ற சர்ச்சையை கிளப்பும் ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அதே சொல்லாடலை தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் பதிவு செய்தது  புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் பதிவு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவரது பதிவை பலரும் கண்டித்தனர்.  இதையடுத்து அவர் சர்ச்சைப்பதிவை நீக்கினார். ஆனால் அதுகுறித்த வருத்தம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

அவரது பேச்சு தமிழகம் முழுதும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று தனது ட்வீட்டை அழித்த தமிழிசை ஒருநாள் கழித்து அந்த பதிவு குறித்து மறுப்பு வெளியிட்டுள்ளார். அவரது ட்வீட்:

“நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்ற அமர்வின் இடையே தி.மு.க வினர் எனது கணவரையும்,குடும்பத்தினர் மீது வீண் அவதூறு பரப்பும் வகையில் அவர் தன் குற்ற வழக்குகளையும் ,வருமானத்தையும் மறைத்ததாக பொய்யான புகாரை அளித்த போது எனது கணவர் புகழை கெடுக்கும் விதத்தில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் குற்றபரம்பரை என நான் குறிப்பிட்டது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பம்,ஊழல் பரம்பரை,ஊழல் விஞ்ஞானிகள் பற்றித்தான், தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்கள் என கொண்ட நான் என்றும் போற்றும் பரம்பரை பற்றியென வழக்கம்போல் திரித்துக்கூறும் தி.மு.கவினரை கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ஒரு மறுப்புக்கு பதிலளிக்கிறேன் என மீண்டும் ஒரு சர்ச்சையை தமிழிசை கிளப்பியுள்ளார். திமுகவினரை ஊழலுக்காக கண்டிக்கும் நீங்கள் அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள் அவர்களை ஏன் கண்டிக்கவில்லை என அவரது பதிவின் கீழ் கேட்டுள்ளனர்.

ராகவேந்தரன் என்பவர் (Ragavendran.R@RRAGARAJA)

“அய்யோ அக்கா என்னமா நடிகரிங்க.....

நல்ல வேளை அட்மின் மேல பழி போடாம விட்டிங்களே”  என பதிவிட்டுள்ளார்.

அருண் பிரகாஷ் என்பவர் (Arunprakash P@Arunprakash_P)

 “அப்போ அஇஅதிமுக ஊழல் செய்யவில்லையா ? அப்ப யாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஜெயலலிதாவுக்கா? அல்லது கருணாநிதிக்கா? சிந்திக்க வேண்டும்” என பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஜேஷ் பன்னீர் செல்வம் என்பவர் (Bijesh panneerselvam@bijesh1210)    “சொல்வதும் பிறகு பிரச்சனை வந்த உடன் இல்லை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, நான் போடல என் அட்மின் போட்டர்னு சொல்றதும் வழக்கம் தானே. இது புதிது அல்லவே. எதிர் கட்சியை குறை கூறுவதை விட உங்கள் சாதனைகள் ஏதேனும் இருந்தால் அதை கூறி வாக்கு கேளுங்க சிறப்பாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT