ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவது குறைந்துள்ளது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு, கடந்த ஆண்டு மே 28-ம் தேதி அந்த ஆலையை மூடி சீல் வைத்தது.
இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தர விட்டது.
அதன்படி, ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத் தில், நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, ‘‘ஆலை கடந்த 10 மாதங் களுக்கும் மேலாக மூடப்பட்டுள் ளது. தற்போது தேர்தல் வாக்குறுதி யாகவே இதை அரசியல் கட்சியி னர் சேர்த்துள்ளனர். ஏற்கெனவே ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இயந்திரங்கள் வீணாகும்
தற்போது பராமரிப்பு பணிக்காக ஆலையைத் திறக்காவிட்டால் சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் வீணாகிவிடும். எனவே ஆலையைத் திறந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், தூத்துக்குடி பகுதி சுற்றுவட்டார மக்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி 161 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்து விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை ஏப்.18-ம் தேதி தேர்தலுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டும்’’ எனவும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ‘‘இந்த வழக்கில் மூன்றாவது நபர் களை இணைப்பு மனுதாரர்களாகச் சேர்க்கக்கூடாது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட வைகோ, ‘‘இந்த வழக்கில் நான் மூன்றாவது நபர் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த ஆலை யால் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே ஒரு போதும் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.
பின்னர் ஆர்யமா சுந்தரம், ‘‘இந்த வழக்கை நீண்ட காலத்துக்கு தள்ளி வைக்காமல் விரைவாக விசாரிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு் நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே பல வழக்குகள் பட்டியலில் இருக்கும்போது இதற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அவசரமாக விசாரிக்க முடியாது’ என்றனர்.
தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘ஸ்டெர் லைட் ஆலையை மூடியபிறகு சுற்றுச்சூழல் மேம்பாடு அடைந்து உள்ளது. நிலத்தடி நீர் மாசடைவதும் குறைந்துள்ளது’’ என்றார்.
அரசு பதிலளிக்க உத்தரவு
அதையடுத்து நீதிபதிகள், ‘‘இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும். அதேபோல இந்த ஆலையை மூடியபிறகு அப்பகுதியில் காற்று மாசடைவது குறைந்துள்ளதா? நிலத்தடி நீர் தரம் உயர்ந்துள்ளதா என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும்’’ என்று உத்தர விட்டு விசாரணையை வரும் ஏப்.23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.