68 சமூகத்தவரை சீர்மரபு பழங்குடியினராக பெயர் மாற்றும் பிரச்சனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு துரோகம் செய்துவிட்டதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "1979 வரை சீர்மரபு பழங்குடியினர் என்று அழைக்கப்பட்டு வந்த மறவர், பிறமலைக்கள்ளர், வலையர், தொட்டியநாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிகவுண்டர், போயர், ஒட்டர், குறவர் உள்ளிட்ட 68 சமூகத்தினர், 30.07.1979 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் எம்.எஸ் 1310-யின் படி சீர்மரபு வகுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் ஏற்கெனவே அனுபவித்து வந்த சலுகைகள் பறிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார விஷயங்களில் கடும் சிரமங்களுக்கு இம்மக்கள் ஆளானார்கள்.
எனவே, இழந்த உரிமைகளை மீண்டும் பெறவும், சமூகம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் உரிய முன்னேற்றத்தை மறவர், பிறமலைக்கள்ளர், வலையர், தொட்டியநாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிகவுண்டர், போயர், ஒட்டர், குறவர் உள்ளிட்ட 68 சமூக மக்கள் பெறவும் அவர்களை மீண்டும் சீர்மரபு பழங்குடியினராக பெயர் மாற்றி அறிவிக்க வேண்டும் என்று அமமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், 30.07.1979 அன்று போடப்பட்ட அரசாணை எண் 1310-ஐ திரும்பப் பெற்றுக்கொள்வதாக வெள்ளிக்கிழமை ஒரு அரசாணையை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. இது அந்த 68 சமூக மக்களின் கோரிக்கைகளில் ஒன்று தான் என்றாலும் அதே அரசாணையில், குறிப்பிட்ட 68 சமூக மக்களும் சீர்மரபு வகுப்பினர் என்றே தமிழகத்தில் தொடர்ந்து அழைக்கப்படுவார்கள்; மத்திய அரசை அணுகும்போது அவர்கள் சீர்மரபு பழங்குடியினர் என அழைக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள அந்த சமூகத்து மக்களை ஏமாற்றியிருப்பதுடன் அவர்களுக்கு பச்சை துரோகத்தையும் செய்திருக்கிறது தமிழக அரசு.
சீர்மரபு வகுப்பினர் என்பதை சீர்மரபு பழங்குடியினர் என்று பெயர் மாற்றினால் தான் இழந்த உரிமையை, சலுகைகளைப் பெற முடியும் என்று அவர்கள் நீண்ட காலமாகப் போராடிவரும் நிலையில் அவர்களது கோரிக்கையை ஏற்பதுபோல் பாசாங்கு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் ஒரு பெயர்; மத்தியில் ஒரு பெயர் என்ற நிலைக்கு இந்த சமூகத்து மக்களை தள்ளியிருப்பது உண்மையில் அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
எனவே இந்த தவறை உணர்ந்து, வெள்ளிக்கிழமை வெளியான அரசாணை எண். 26-ல் உரிய திருத்தங்கள் செய்து குறிப்பிட்ட 68 சமூக மக்களும் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார ரீதியாக மத்திய, மாநில அரசுகளை அணுகும்போது சீர்மரபு பழங்குடியினர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்படும்படி உரிய உத்தரவை பிறப்பித்து, அதன்மூலம் அந்த மக்கள் சட்டப்பூர்வமான உரிமைகளையும், சலுகைகளையும் தொடர்ந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.