தமிழகம்

வால்டாக்ஸ் சாலையில் ஆந்திரப் பயணிகள் 4 பேரிடம் ரூ.1.36 கோடி பறிமுதல்: ஐபிஎல் சூதாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பணமா?- போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

ஆந்திராவிலிருந்து பேருந்தில் வந்து இறங்கிய 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரித்து சோதனையிட்டதில் அவர்கள் உடைக்குள் ரூ.1 கோடியே 36 லட்சம் ரொக்கப் பணத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. ஐபிஎல் சூதாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பணமா? என்பது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆந்திராவிலிருந்து பேருந்து ஒன்று இன்று அதிகாலை சென்னை வால்டாக்ஸ் சாலைக்கு வந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கிச் சென்றனர். அதில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள் பிரபல ஹோட்டல் அருகே தயங்கித் தயங்கி யாரையோ எதிர்ப்பார்த்தபடி நின்றிருந்தனர்.

அவர்கள் தோற்றம், உடைக்குள் எதையோ அடைத்து வைத்துள்ளதுபோல் இருப்பதை அங்கு போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர்கள் மதியழகன் மற்றும் பரமசிவன் ஆகியோர் பார்த்து சந்தேகமடைந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே உடனடியாக அவர்கள் குறித்து பூக்கடை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பூக்கடை போலீஸார் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் போலீஸார் சோதனையிட்டதில் 4 பேரின் உடைக்குள் லட்சக்கணக்கில் 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்த பணத்தை போலீஸார் எண்ணிப் பார்த்ததில் அது மொத்தம் ரூ. 1 கோடியே 36 லட்சம் இருப்பது தெரியவந்தது.

போலீஸார் மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் பெயர் பாஷா (33)  (இவர் ரூ. 36 லட்சத்தை உடைக்குள் மறைத்து வைத்திருந்தார் ) ஸ்ரீநிவாசலு (48)  (இவர் ரூ. 40 லட்சத்தை உடைக்குள் மறைத்து வைத்திருந்தார் ),  ஆஞ்சநேயலு (47)  (இவர் ரூ. 26 லட்சத்தை உடைக்குள் மறைத்து வைத்திருந்தார்), ஷேக் சலீம்(28) (இவர் ரூ. 34 லட்சத்தை உடைக்குள் மறைத்து வைத்திருந்தார்) எனத் தெரியவந்தது. அனைவரும் விஜயவாடாவிலிருந்து பேருந்து மூலம் சென்னை வந்துள்ளனர்.

அவர்கள் கொண்டுவந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கொண்டுவந்த பணம் ஹவாலா பணமா? அல்லது ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கியதை ஒட்டி கிரிக்கெட் சூதாட்டத்திற்காக கொண்டுவரப்பட்டதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT