வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு 40 தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: வரும் மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். நாங்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம்.
தற்போது மின்சார கட்டணம், மூலப்பொருட்கள் விலை, தொழிலாளர் ஊதியம் என எதுவும் உயராத நிலையில், ஒரே மாதத்தில் சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.100 உயர்ந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இதேபோல, மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, சிமென்ட் மற்றும் மணல் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.