தமிழகம்

தமிழிசையின் ’குற்றப்பரம்பரை’ சர்ச்சை ட்வீட்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்: ட்வீட்டை நீக்கினார்

செய்திப்பிரிவு

வேட்புமனு தாக்கல் பிரச்சினையில் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை, நாங்கள் கற்றப்பரம்பரை குற்றப்பரம்பரை அல்ல என்று ட்வீட் செய்ய அவரது ட்விட்டால் அவரது பதிவுக்கு கீழ் நெட்டிசன்கள் கொந்தளித்ததால் எதிர்ப்பை அடுத்து பதிவையே நீக்கினார் தமிழிசை.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு மீதான பரிசீலனை மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக கோரியிருந்தது. இந்த சர்ச்சையால் மனு பரிசீலனை செய்வது நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குற்ற வழக்கு இல்லை. நான் கற்ற பரம்பரை. குற்ற பரம்பரை அல்ல.கணவரும் அவ்வாறே.வீண் வதந்தி? தோல்வி பயம்???" என பதிவிட்டுள்ளார்.

பதிவு செய்யவேண்டும் என்கிற நோக்கில் எதுகை மோனையில் கற்றப்பரம்பரை மற்றும் குற்றப்பரம்பரை என பதிவிட்டிருப்பது தமிழிசைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுதும் 13 மில்லியன் மக்களை அவர்கள் சார்ந்த சமூகத்தை வைத்து குற்றப்பரம்பரை என அறிவித்தது. தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரை என அறிவித்தனர்.

இது அந்தக் காலத்தில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. இதை எதிர்த்து ஜவஹர்லால் நேருமுதல் முத்துராமலிங்கதேவர், இடதுசாரி இயக்கத்தினர் உள்ளிட்டோர் மாற்றவேண்டும் என போராடினர். 1947-க்குப்பிறகு இச்சட்டம் நீக்கப்பட்டு நீர்த்துப்போனது. அதன்பின்னர் யாரும் குற்றப்பரம்பரை என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் அது தேவையற்ற சர்ச்சையை கிளப்பும் ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அதே சொல்லாடலை தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் பதிவு செய்தது  புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவரது பதிவுக்கு நெட்டிசன்களில் பதில்:

சாந்தி நாராயண் என்பவர் பதிவில் (Shanthi Narayanan‏ @shanthinarayana)  “குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கில அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்க்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடல். தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக,குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக குற்றப்பரம்பரை என்ற சொல்லாடலை பயன்படுத்தியமை வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

சிறுதுளி என்பவர் (@itntweets) “வேட்பு மனுவை ஒழுங்கா பூர்த்தி பண்ணாம., குற்ற பரம்பம்பரை கற்ற பரம்பரைன்னு கத விடாதிங்க அக்கா” என பதிவிட்டுள்ளார்.

அலாவுதின் கில்ஜி சோழன்‏ என்பவர் (@ashvajith) “இத்தனை நாள் இல்லாமல் கேவலம் தேர்தல் வெற்றிக்காக நாடார் நாடார்ண்ணு போஸ்டர் அடிச்சு ஒட்டினீங்க... இப்ப தோல்வி பயத்தில் குற்ற பரம்பரை என தேவர் சமுகத்தை சீண்டி நாடார் தேவர் என கலகம் மூட்ட பார்க்காதீர் ... கேவலமான கட்சியில் இருப்பதால் இப்படியான கேவலமான வேலையை செய்யாதீர்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் “நாங்கள் குற்றப்பரம்பரை தான் ஆங்கிலேரை எதிர்த்து புரட்சி பன்னுனா குற்றப்பரம்பரை..குற்றப்பரம்பரை என்பதை ஏளனம் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் “ஆனா நீங்க நோட்டாவிடம் தோற்ற பரம்மரை என்பது உலகமே அறியும் அக்கா கற்ற பரம்பரைக்கு ஒரு application form ஒழுங்கா fill பண்ண தெரியல, இதுல எதுகை மோனை வேற” என பதிவிட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி என்பவர் ( @sathiyam1967) “குற்றபரம்பரையினரை அவதூறு செய்யும் தமிழிசையை வன்மையாக கண்டிக்கிறோம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

லோகநாதன் என்பவர் (Loganathan‏ @kbloganathan)  “எல்லாரும் ஓடியாங்க இந்தம்மா எப்போதோ ஒழிக்கப்பட்ட "குற்றப்பரம்பரை" விடயத்தை மீண்டும் சொல்றாங்க. எல்லாரும் என்னன்னு கேளுங்க.” என பதிவிட்டுள்ளார்

அஜித் பாண்டியன் (Ajith Pandian‏ @AjithPV8) என்பவர் “குற்ற பரம்பரை' என யாரை சொல்றீங்க ??? எதுகை மோனைக்காக ஏதவேண்டுமானாலும் பேசலாமா ???” என கேட்டுள்ளார்.

செந்தில்நாதன்‏ (@Sk425114Senthil) “நாங்க குற்றபரம்பரை இல்ல ஆங்கிலேய அரசை எதிர்த்தால் அவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பரம்பரை” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் பதிவு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவரது பதிவை பலரும் கண்டித்துள்ளனர்.  இதையடுத்து அவர் சர்ச்சைப்பதிவை நீக்கியுள்ளார். ஆனால் அதுகுறித்த வருத்தம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

தேர்தல் பிரச்சார நேரத்தில் இதுபோன்ற பதிவுகள் பாஜக மற்றும் அதிமுக வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  

SCROLL FOR NEXT