தொடர்ந்து நடந்த கோஷ்டி மோதல்களைத் தொடர்ந்து மாநில கல்லூரி மாணவர்கள் வரும் பேருந்துகளில் போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க சென்னை மாநகர போலீஸார் தற்போது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
மாநில கல்லூரி மாணவர்கள் வரும் பேருந்துகளிலும் அந்தந்த பகுதி போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். ஒரே பேருந்தில் 3 முறைகூட சோதனை நடந்தது. மாநில கல்லூரியின் நுழைவு வாயிலில் பேராசிரியர்களும், போலீஸாரும் சேர்ந்து நின்று மாணவர்களின் பைகளை சோதனை செய்தனர். மாணவர்கள் ஆயுதங்கள் கொண்டு வருவதை தடுப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இதேபோல நந்தனம் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பிரச்னைக் குரிய பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மாநில கல்லூரியில் மோதல்களுக்கு காரணமாக இருந்ததாக கூறி 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை மந்தைவெளியில் இருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில்(எண் 21) ராயப்பேட்டையில் இருந்து புதுக்கல்லூரி மாணவர்கள் சுமார் 20 பேர் ஏறினர். அவர்கள் பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தில் பக்கவாட்டை தட்டி காது வலிக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பினர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் கிடைக்க, ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று பல்லவன் இல்ல டிப்போ அருகே பேருந்தை நிறுத்தி அதிலிருந்த மாணவர்கள் சிலரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.