தமிழகம்

சென்னையில் குழந்தைகளை வைத்து பெண்களை சீரழிக்கும் கும்பல்?: தனியார் பள்ளி சுற்றறிக்கையால் பரபரப்பு

செய்திப்பிரிவு

பெண்களை கடத்தும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி தனியார் பள்ளி ஒன்று மாணவியரின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளியில் படிக்கும் மாணவியரின் பெற்றோர்களுக்கு அப்பள்ளியின் நிர்வாகம் ஒரு கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில், “சாலை யோரமாக எந்த பகுதியிலாவது குழந்தை ஒன்று அழுதபடி, தன்னை தன் வீட்டில் கொண்டு போய் விடச்சொல்லிக்கேட்டால், அதை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு உங்கள் மகள்களிடம் சொல்லுங்கள். அந்த குழந்தை குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றால், கடத்தல் கும்பலிடம் அவர்கள் சிக்கிக்கொள்வார்கள். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், கையில் சிக்கும் பெண்களை பலாத்காரம் செய்கின்றனர். எனவே உங்கள் மகள்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பேஸ்புக், வாட்ஸ் ஆப்- போன்றவற்றில் பரவியதால் சென்னையில் பரவலாக பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவம் சென்னையில் நடந்ததா என்று அப்பள்ளி அமைந்துள்ள பகுதியின் போலீஸ் துணை கமிஷனர் (மயிலாப்பூர்) பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவம் நடைபெறுகிறது. அங்குள்ள மர்ம கும்பல் சாலையில் குழந்தைகளை அழவைத்து, பெண்களை கடத்துகின்றனர். அதனால், அங்குள்ள டிஏவி பள்ளி நிர்வாகம், இந்தியா முழுவதிலும் உள்ள தங்களது பள்ளிகளுக்கு இத்தகவலைத் தெரிவித்து, பெற்றோரை எச்சரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள டிஏவி பள்ளி நிர்வாகம், பெற்றோர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி யுள்ளது. சென்னையில் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை.

இந்த கடிதத்தை அனுப்புவது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் போலீஸாருடன் கலந்தாலோசிக்கவில்லை. இனி இதுபோன்று ஏதாவது கடிதம் அனுப்புவதற்கு முன்பு, போலீஸாருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT