வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. அதை தொடர்ந்து 8 பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டது.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை 8 மணியளவில் வந்த தொலைபேசியில் பேசிய நபர், 'வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இரு பள்ளிகளுக்கும் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் சென்று சோதனை நடத்தினர்.
பள்ளி தொடங்குவதற்கு முன்பே மிரட்டல் வந்ததால் குறைந்த அளவிலான மாணவர்களே வகுப்பறைக்குள் இருந்தனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இரு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக நிர்வாகத்தினர் அறிவித்தனர். தகவல் அறிந்ததும் பெற்றோர் பதட்டத்துடன் வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தவர்களும் அவர்களை அப்படியே வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
சோதனையின் முடிவில் சந்தேகப்படும்படியாக எந்த பொருளும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில் அது ஜே.ஜே. நகர் கலைவாணர் காலனியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. விசாரணையில் அவர் 3 மாதங்களுக்கு முன்பே தனது செல்போனை தொலைத்துவிட்டது தெரிந்தது. அந்த போனில் இருந்து பேசியவர் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் செய்தி காலையிலேயே தொலைக் காட்சிகளில் வெளியானதால் மற்ற பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் செய்தி பரவியது.
இதனால் வளசரவாக்கம், விருகம்பாக்கம், கொருக்குப் பேட்டை, வண்ணாரப் பேட்டை, ஆர்.கே. நகர், தண்டையார்பேட்டை பகுதிகளில் 8 தனியார் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டது.
புகைப்படக்காரர் மீது தாக்குதல்
வெடிகுண்டு பீதி பரவியதால் விருகம்பாக்கம் வாணி வித்யாலயா பள்ளி மாணவர்களும் அவசர அவசரமாக வெளியேறினர். தகவல் அறிந்து அங்கு சென்ற 'தி இந்து' (தமிழ்) புகைப்படக்காரர் பிரபு அக்காட்சிகளை புகைப்படம் எடுத்தார். அதைப் பார்த்த பள்ளியின் காவலாளிகள் தூர் பகதூர்(48), சத்ரா பகதூர்(31) ஆகியோர் புகைப்படக்காரர் பிரபுவை படம் எடுக்கவிடாமல் தடுத்தது மட்டுமின்றி, செல்போன் மற்றும் கேமராவை பறித்து சரமாரியாக தாக்கினர். பாதுகாப்புக்காக வந்திருந்த 2 காவல்துறையினர், அதை தடுக்க முற்படாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரபு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாநகர ஆணையர் ஜார்ஜிடம் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி காவலாளிகள் தூர் பகதூர், சத்ரா பகதூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியில் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.