தமிழகம்

அப்பாவி பொதுமக்களின் உயிர் பறிபோகிறது; செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட வேண்டாம்: இருகரம் கூப்பி வேண்டி நீதிபதிகள் அறிவுரை

செய்திப்பிரிவு

அப்பாவி பொதுமக்களின் உயிர் பறிபோவதால் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்ட வேண்டாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருகரம் கூப்பி வேண்டுவதாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரி  புதிய பேருந்து நிலையம் அருகே நடந்துசென்ற  கட்டிடத் தொழிலாளி ரகு என்பவர் மீது பேருந்து மோதி உயிரிழந்தார். கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இந்த விபத்து வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்டஅமர்வு நீதிமன்றம், ரகுவின்  குடும்பத்துக்கு ரூ.18.88 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதைஎதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘விபத்து நடந்தபோது ரகுவின் மனைவி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தந்தையின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் போய்விட்டது.  எனவே இழப்பீட்டுத்தொகையை நாங்கள் ரூ.25.30லட்சமாக உயர்த்துகிறோம்.

இந்த தொகையை 4 வாரத்துக்குள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் காப்பீட்டு நிறுவனம் செலுத்தவேண்டும். அதேநேரம் வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால்தான் ஏராளமான மனித உயிர்கள் பறிபோகின்றன. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் சம்பந்தமே இல்லாத அப்பாவிபொதுமக்களின் உயிர் பறிபோகநேரிடுகிறது.

எனவே செல்போனில் பேசிக்கொண்டோ,  குடிபோதையிலோ, அஜாக்ரதையாகவோ இல்லாமல் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும்என அறிவுரை கூறாமல் இருகரம் கூப்பி வேண்டுகோளாக விடுக்கிறோம்” என உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT