ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மாயமான செய்தியை சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
முன்னதாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று (புதன்கிழமை) ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது பள்ளிப்பருவத்தில் என் வீட்டுப்பாட நோட்டுகள்கூட இப்படித்தான் காணாமல் போயின. ஆசிரியரிடம் இந்தக் காரணத்தை நான் சொல்லும்போது அவர் ஒரு பிரம்பால் எனது காலில் அடித்து முழங்காலிடச் செய்வார். அது அந்தக் காலம்" எனப் பதிவிட்டிருக்கிறார். #Rafale #Fail #ChorChor #DogAteMyHomework என்ற ஹேஷ்டேகுகளின் கீழ் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
சிறுபிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலேயே வீட்டுப்பாட நோட் தொலைந்துவிட்டதாக பொய் சொல்வது போல் மத்திய அரசும் ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்வதாக சித்தார்த் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டது எப்படி என பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.